சமூக வலைதளங்கள் அறிவியல் கண்டுபிடிப்பு. ஆனால், இந்த விஞ்ஞானக் கருவிகள் அழுக்கு மூட்டைகளின் அணிவகுப்பாக அஞ்ஞான சாக்கடையின் ஊற்றுக் கண்ணாக போய்விடலாமா?
‘நாய் விற்ற காசு குரைக்காது’ என்ற பொருளில் செயல்படுகின்றனவா?
‘வாட்ஸ் அப்’ என்ற அறிவியல் கருவியில் சிதம்பரம் நடராஜர் கடவுள் பற்றி ஒரு கரடியைக் கட்டவிழ்த்து விட்டுள்ளனர். அதில் ஒரு பகுதி இதோ:
சிதம்பரத்திலுள்ள நடராஜர் கோயிலில் உள்ள சில அற்புதமான ரகசியங்கள் ஆச்சர்யங்கள் பின்வருமாறு:
பல கோடி டாலர்கள் செலவு செய்து எட்டு ஆண்டுகளாக ஆராய்ச்சி செய்து சிதம்பரம் நடராஜர் கால் பெருவிரலில்தான் மொத்த பூமியின் காந்த மையப்புள்ளி இருப்பதாக உலக நாடுகள் கண்டுபிடித்துள்ளன. Centre Point of world's Magnetic Equator. எந்த செலவும் செய்யாமல் எந்த டெலஸ்கோப்பும் இல்லாமல் இதனைக் கண்டறிந்த நமது தமிழன் எப்பேற்பட்ட அறிவுமிக்கவன்? அதை உணர்ந்து அணுத்துகள் அசைந்துகொண்டே இருக்கும் என்ற உண்மையை ஆடும் நடராஜர் வாயிலாக உணர்த்தும்படி சிலை அமைத்து பூமியின் மையப்புள்ளியில் மறைமுகமாக அமர்த்திய அந்தச் சாதனை எப்பேற்பட்டது? இதனை 5000 வருடங்களுக்கு முன்பே கண்டறிந்து திருமந்திரத்தில் குறிப்பிட்ட திருமூலரின் சக்தி எப்படிப்பட்டது? புரிகிறதா? தமிழன் யார் எனத் தெரிகிறதா? திருமூலரின் திருமந்திரம் மிகப் பெரிய உலகிற்கே வழிகாட்டும் அறவியல் நூலாகும். இதை உணர்ந்துகொள்ள தற்போதுள்ள அறிவியலுக்கு இன்னும் ஒரு நூற்றாண்டு தேவைப்படலாம். வாழ்க தமிழ்! வெல்க தமிழனின் நுண்ணறிவு!
சிதம்பரம் நடராஜர் கோயில் ரகசியம் என்று பலரும் பல விசயங்களைக் கூறிவரும் வேளையில், அந்தக் கோயிலில் இருக்கும் அறிவியல், பொறியியல், புவியியல், கணிதவியல், மருத்துவவியல் குறித்த ஆச்சர்யங்களின் சில தகவல்கள்.
முன்னோர்கள் செய்த எல்லா செயல்களும் ஒரு தெளிவான சிந்தனையை நோக்கியே பயணித்துள்ளது, அப்படி இருக்க அவர்கள் நிர்ணயித்த பிரம்மாண்டமான கற்கோவில் களுக்கு பின் இருக்கும் சில அற்புதங்களை அதனிலடக்கும். அந்த வகையில் சிதம்பரம் நடராஜர் கோயிலில் உள்ள சில அற்புதமான ரகசியங்கள் இவைகள்தான்.
1. இந்தக் கோயில் அமைந்திருக்கும் இடமானது உலகின் பூமத்திய ரேகையின் சரியான மையப் பகுதி என்று கூறப்படுகின்றது. (Centre Point of world's Magnetic Equator).
2. பஞ்சபூத கோயில்களில் ஆகாயத்தைக் குறிக்கும் தில்லை நடராஜர் ஆலயம், காற்றைக் குறிக்கும் காலஹஸ்தி ஆலயம், நிலத்தைக் குறிக்கும் காஞ்சி ஏகாம்பரேஸ்வர ஆலயமும் சரியான ஒரே நேர்க்கோட்டில் அதாவது சரியாக “79 டிகிரிஸ், 41 நிமிடங்கள் கிழக்கு தீர்க்க ரேகையில் (Longitude) அமைந்துள்ளது’’ . இன்று Google map உதவியுடன் நாம் வானத்தின் மேல் இருந்து பார்ப்பதைப் போன்று பார்த்தால் மட்டுமே விளங்கும் இந்த துல்லியம் அன்றைக்கு கணிக்கப்பட்டது ஒரு பொறியியல், புவியியல் மற்றும் வானவியலின் உச்சகட்ட அதிசயம்.
3. மனித உடலை அடிப்படையாக கொண்டு அமைக்கப்பட்டிருக்கும் சிதம்பரம் கோயிலில் 9 நுழைவு வாயில்களும், மனித உடலில் இருக்கும் 9 வாயில்களை குறிக்கின்றது.
4. விமானத்தின் மேல் இருக்கும் பொற்கூரை 21,600 தங்கத் தகடுகளைக் கொண்டு வேயப்பட்டுள்ளது. இது மனிதன் ஒரு நாளைக்கு சராசரியாக 21,600 தடவைகள் சுவாசிக்கிறான் என்பதைக் குறிக்கின்றது. (15*60*24=21,600).
5. இந்த 21,600 தகடுகளை வேய 72,000 தங்க ஆணிகள் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த 72,000 என்ற எண்ணிக்கை மனித உடலில் இருக்கும் ஒட்டுமொத்த நாடிகளை குறிக்கின்றது. இதில் கண்ணுக்குத் தெரியாத உடலின் பல பாகங்களுக்கு சக்தியைக் கொண்டு சேர்ப்பவையும் அடங்கும்.
6. திருமந்திரத்தில் “திருமூலர்’’
மானுடராக்கை வடிவு சிவலிங்கம்
மானுடராக்கை வடிவு சிதம்பரம்
மானுடராக்கை வடிவு சதாசிவம்
மானுடராக்கை வடிவு திருக்கூத்தே
என்று கூறுகிறார். அதாவது “மனிதன் வடிவில் சிவலிங்கம், அதுவே சிதம்பரம், அதுவே சதாசிவம், அதுவே அவரின் நடனம்’’ என்ற பொருளைக் குறிக்கின்றது.
7. “பொன்னம்பலம்’’ சற்று இடதுபுறமாக அமைக்கப்பட்டுள்ளது. இது நம் உடலில் இதயத்தைக் குறிப்பதாகும். இந்த இடத்தை அடைய அய்ந்து படிகளை ஏற வேண்டும். இந்த படிகளை “பஞ்சாட்சர படி’’ என்று அழைக்கப்படுகின்றது. அதாவது “சி, வா, ய, ந, ம’’ என்ற ஐந்து எழுத்தே அது. “கனசபை’’ பிற கோயில்களில் இருப்பதைப் போன்று நேரான வழியாக இல்லாமல் பக்கவாட்டில் வருகின்றது. இந்த கனகசபை தாங்க 4 தூண்கள் உள்ளன. இது 4 வேதங்களைக் குறிக்கின்றது.
8. பொன்னம்பலத்தில் 28 தூண்கள் உள்ளன. இவை 28 ஆகமங்களையும், சிவனை வழிபடும் 28 வழிகளையும் குறிக்கின்றன. இந்த 28 தூண்களும் 64+64 மேற்பலகைகளைக் கொண்டுள்ளது (Beam), இது 64 கலைகளைக் குறிக்கின்றன. இதன் குறுக்கில் செல்லும் பல பலகைகள் (CROSS BEAMS), மனித உடலில் ஓடும் பல ரத்த நாளங்களைக் குறிக்கின்றது.
9. பொற்கூரையின் மேல் இருக்கும் 9 கலசங்கள், 9 வகையான சக்தியைக் குறிக்கின்றது. அர்த்த மண்டபத்தில் உள்ள 6 தூண்கள், 6 சாஸ்திரங்களையும், அர்த்த மண்டபத்தின் பக்கத்தில் உள்ள மண்டபத்தில் உள்ள 18 தூண்கள், 18 புராணங்களையும் குறிக்கின்றது.
10. சிதம்பரம் நடராஜர் ஆடிக் கொண்டிருக்கும் ஆனந்த தாண்டவம் என்ற கோலம் “COSMIC DANCE” என்று பல வெளி நாட்டு அறிஞர்களால் அழைக்கப்படுகின்றது. விஞ்ஞானம் இன்று சொல்வதை இந்துமதம் அன்றே கூறிவிட்டது. அறிவியல் உண்மை (ஆன்மீகம்).
இப்படி ஒரு செய்தி கை வைத்து, மூக்கு வைத்து, சோடிக்கப்பட்டு வாட்ஸ் அப்பில் உலவ விடப்பட்டுள்ளது. பல கோடி ரூபாய் போட்டு செலவு செய்தார்களா? யார் அந்த செலவாளிகள்? எட்டு ஆண்டுகள் ஆய்வு நடந்தனவாம்? எந்தெந்த ஆய்வுகள் என்பதை ஏன் விளக்கவில்லை? உலக நாடுகள் கண்டுபிடித்துள்ளனவாம். இவற்றை எல்லாம் எழுதத் தெரிந்த கூட்டத்துக்கு எந்தெந்த நாடுகள் என்பதைப் பட்டியலிடுவதில் என்ன தயக்கம்?
கேட்பவன் கேணயனாக இருந்தால் எருமை மாடு ஏரோப்பிளான் ஓட்டியது என்பானாம்.
சிதம்பரத்தில் உள்ள நடராஜர் கோயிலில் உள்ள சில அற்புதமான ரகசியங்கள், ஆச்சரியங்கள் என்ற பெயரால் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள கரடியை நினைத்தால் ஒரு பக்கத்தில் கடும்கோபமும், இன்னொரு பக்கத்தில் விலாநோகும் அளவில் கடும் சிரிப்பும் போட்டிப் போட்டுக்கொண்டு களத்தில் குதிக்கின்றன.
திருமந்திரத்தில் திருமூலர் கூறிவிட்டாராம். அதாவது மனிதன் வடிவில் சிவலிங்கம், அதுவே சிதம்பரம், அதுவே சதாசிவம், அதுவே நடராஜனின் நடனம் என்று வாட்ஸ் அப்பில் பரப்பும் அந்த (மேல்) தாவிகளைக் கேட்கிறோம்.
ஒரே ஒரு கேள்விதான் அது. சிதம்பரம் நடராஜன் கோயில் கட்டப்பட்டது எப்போது? பத்தாம் நூற்றாண்டில் குலேத்துங்க சோழனால் தொடங்கப்பட்ட அந்தக் கோயில் இரண்டு நூற்றாண்டுகள் வரை தொடர்ந்து கொண்டுதான் இருந்தது. இக்கோயில் கட்டப்படுவதற்கு முன் நடராஜர் சிலை நிறுவப்படுவதற்கு முன் இந்தப் பூமி எதில் நின்று கொண்டு இருந்தாராம்? பூமியின் காந்த மையப்புள்ளி நடராஜர் என்னும் பொம்மை _ நட்டு வைப்பதற்கு முன் எங்கே குதி கொண்டிருந்தது?
சிதம்பரம் நடராஜனின் சர்வவல்லமை பற்றிய ஒரு வரலாற்று உண்மையைத் தெரிந்துகொண்டால் ‘ப்பூ’ இவ்வளவுதானா? போகிறபோக்கில் எத்தி எறிந்துவிட்டுப் போய்விடுவார்களே! இதோ படியுங்கள்:
முப்பத்தேழு ஆண்டு, பத்துமாதம், இருபது நாட்கள் (24.12.1648 முதல் 14.11.1686 வரை) சிதம்பரம் கோவிலுள்ள நடராஜர் சிலை சிதம்பரத்திலிருந்து வெளியேறியிருந்தது என்னும் உண்மை இப்போதுதான் தெரியவந்துள்ளது. சிதம்பரத்திலிருந்து எடுத்துச் செல்லப்பட்ட நடராஜர் சிலை, முதல் நாற்பது மாதங்கள் குடுமியா மலையிலும், பின்னர் மதுரையிலும் இருந்திருக்கிறது. இந்தச் செய்தி, இப்போது திருவாரூரில் கிடைத்திருக்கும் மூன்று வடமொழிச் செப்பேடுகளிலிருந்து தெரிய வருகிறது.
தில்லையை விட்டு நடராஜர் சிலை அகற்றப்பட்டதற்கு என்ன காரணம் என்பது சரிவரத் தெரியவில்லை. இருந்தாலும் அக்காலச் சூழ்நிலைகளை வைத்து ஆராயும்போது, பீஜப்பூர் சுல்தானுடைய படையெடுப்புக்கு பயந்து கொண்டோ அல்லது 1647ஆம் ஆண்டு தமிழகத்தின் வடபகுதியில் ஏற்பட்ட கடுமையான பஞ்சத்தின் காரணமாகவோ சிதம்பரத்திலுள்ள நடராஜருக்குச் சரிவர பூஜை நிகழ்த்த முடியாது என்று நினைத்த சில பக்தர்கள் இப்படி நடராஜர் சிலையை எடுத்துச் சென்றிருக்கலாம் என்று யூகிக்கலாம். கடைசியில் மதுரையில் இருந்த நடராஜரை மீண்டும் சிதம்பரத்திற்குக் கொண்டு வந்தது, மராட்டிய மன்னன் சகசி காலத்தில்தான் என்றும் தெரிகிறது.
ஆதாரம்: தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர்
(இந்தச் செய்தி மணியனின் ‘இதயம் பேசுகிறது’ இதழிலும் எடுத்துப் போடப்பட்டது)
37 ஆண்டுகள் சிதம்பரத்தில் நடனம் ஆடும் நடராஜர் கடவுள் கடத்தப்பட்டு விட்டாரே _ அந்தக் காலகட்டத்தில் எந்தப் புள்ளியில் இந்தப் பூலோகம் நின்றதாம்? பதில் சொல்லட்டும் இந்தப் பார்ப்பன மேதாவிகள்.
“பார்ப்பான்பால் படியாதீர்! பார்ப்பான் சொல்லிற்குக் கீழ்ப்படியாதீர்!’’
என்றார் புரட்சிக்கவிஞர். “நூலெனிலோ கோல் சாயும்’’
என்றார் அவ்வையார்.
அது நூற்றுக்கு நூறு துல்லியமான உண்மை என்பதை நிரூபிக்க நாள்தோறும் பார்ப்பனர்களின் சேட்டைகளும், தில்லுமுல்லுகளும் அனந்தம்! அனந்தம்!
இப்படித்தான் அஞ்ஞான குப்பைகளை விஞ்ஞான கில்ட்டு அடித்து பத்திரிகை வியாபாரம் செய்து வந்தார் திருவாளர் ‘ஆனந்த விகடன்’ மணியன் அய்யர்வாள்.
அவர் நடத்திவந்த ‘ஞானபூமி’ மாத இதழில் ஒன்றைக் குறிப்பிட்டிருந்தார்.
“நான் சென்ற வெளிநாடுகளிலெல்லாம் விஞ்ஞான வளர்ச்சி பெற்ற அமெரிக்கா போன்ற நாடுகளில் எல்லாம் நம் மதத்தின் தத்துவங்கள் வேரோடிப் போயிருப்பதைக் கண்டு வியந்தேன். கலிபோர்னியாவில் உள்ள ஒரு விண்வெளி ஆய்வுக் கூடத்துக்கு ‘சங்கரா’ (SANKARA) என்று பெயரிட்டிருப்பதைக் கண்டு அவர்களிடம் விசாரித்தபோது, ‘உங்கள் சங்கரரின் ருத்ர தாண்டவத் தத்துவத்தின் அடிப்படையிலேயே பெரிய விஞ்ஞானத் தத்துவம் அமைந்திருக்கிறது’ என்றார்கள். ஒரு விஞ்ஞானி சொன்னார்: உங்கள் மெய்ஞ்ஞானம் ஏற்கனவே தேடிக் கண்டிருப்பதைத்தான் (SEARCH) நாங்கள் மீண்டும் கண்டுபிடிக்கிறோம். (RESEARCH)”
என்று அவரின் ‘ஞானபூமி’ இதழில் எழுதினார்.
குறிப்பு: மணியனின் இந்த அண்டப் புளுகு குறித்து பெரியார் பேருரையாளர் பேராசிரியர் ‘உண்மை’ இதழில் 1.7.1982) எழுதியிருந்தார்.
அறிவியக்கத்தின் உண்மை நாடுவோர் ஒருவர் செயலில் இறங்கினார். சோமனூர் வழக்குரைஞர் மானமிகு பத்மநாபன் என்னும் அத்தோழர் முதலில் டெல்லியிலுள்ள அமெரிக்கத் தூதுவரகப் பொறுப்பாளர்கட்கு இதுபற்றிய விளக்கம் கேட்டு எழுதினார். தூதரகத்திலிருந்து அந்த மடல் சென்னையிலுள்ள அமெரிக்கச் செய்தி நிறுவனத்திற்குத் திருப்பிவிடப்பட்டு, அந்நிறுவனத்தின் நிகழ்ச்சித் திட்ட அதிகாரி தோழர் பத்மநாபன் அவர்கட்கு மடல் எழுதினார்.
திரு.ஜே.எம்.கோர்ஃப் எனும் அவ்வதிகாரி வரைந்த மடலில்,
“கலிஃபோர்னியாக்காரன் என்ற முறையில் ஓரளவு உறுதிப்பாட்டோடு நான் கூற முடியும், அந்த மாநிலத்தில் ‘சங்கரா’ என்ற பெயருடன் எந்த விண்வெளி ஆய்வு நடுவணும் நிறுவப்படவில்லை என்பதாக’’ எனக் குறிப்பிட்டுவிட்டு, மேலும் இப்பொருள்பற்றித் தொடர்வதற்கு வாய்ப்பாக அமெரிக்க முகவரிகள் இரண்டனை அவர் கொடுத்தார். கோர்ஃப் அவர்களின் மடல் ஒன்றே போதும் என்பதாக உள நிறைவு எய்திவிடவில்லை தோழர் பத்மநாபன்!
கிடைத்த முகவரிகளில் ஒன்றான கலிஃபோர்னியா மாநில ‘லாஸ் ஏஞ்சல்ஸ் டைம்ஸ்’ இதழுக்கு எல்லாவற்றையும் விளக்கமாக எழுதிய நம் அறிவியக்க வழக்குரைஞர்க்கு, அவ்விதழின் அறிவியல் பகுதி ஆசிரியர் திரு.ஜியார்ஜ் அலெக்சாண்டர் என்பவர் கீழ்க்கண்டவாறு விடையெழுதினார்.
ஹிந்து மதத்தின் அழிப்புக் கடவுள் சங்கரனுக்கான எல்லா மதிப்புடனும், கலிஃபோர்னியாவிலோ அல்லது அமெரிக்காவில் வேறெங்கிலுமோ எந்த ஆய்வுக்கூடமும் அவ்வாறு சங்கரன் பெயர் சூட்டப்பெறவில்லை யென்பதை முழு உறுதியோடும் உங்கட்கு நான் சொல்ல முடியும்.’’
-_ இப்படிக் கூறிவிட்டுக் கலிஃபோர்னியா மாநிலத்தைச் சேர்ந்த லிவெர்ழுர் எனுமூரிலுள்ள ஆய்வுக் கூடத்துடன் தொடர்பு கொள்ளுமாறு லாஸ் ஏஞ்சல்ஸ் டைம்ஸ் இதழின் அறிவியல் எழுத்தாளர் எழுதினார்.
நம்முடைய வழக்குரைஞரின் உண்மை நாடும் உயர்ந்த குறிக்கோள் ஓய்ந்துபோகாமல் ஊன்றி நின்றமையால் லிவர்மூர் ஆய்வுக் கூடத்துடனும் தொடர்பு பூண்டார். அவ்வாய்வுக்கூட அதிகாரி திரு. ஸ்டீஃபென்ஸன் என்பவரோ,
“கலிஃபோர்னியாவிலோ அல்லது அமெரிக்க மாநிலங்களிலோ சங்கரா எனும் பெயரில் எந்த விண்வெளி ஆய்வுக் கூடமும் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை’’ என எழுதியதுடன் விட்டுவிடவில்லை.
“ஹிந்து மத நம்பிக்கைகளிலும் பழக்கங்களிலும் பற்றார்வம் தெரிவிப்பதில் விரும்பி ஈடுபடுவதற்கு அமெரிக்க அறிவியலார்க்கு எந்தத் தேவையுமில்லை.’’ என்று மண்டையில் அடித்துப் பதில் எழுதினார். இட்டுக்கட்டி, புனைச்சுருட்டுகளைப் புராணகாலம் முதல் எழுதி ஏமாற்றியவர்கள் இப்பொழுது நவீன வாட்ஸ் அஃப்களையும் பயன்படுத்தி அள்ளி விடுகிறார்கள். எச்சரிக்கை!
- கவிஞர் கலி.பூங்குன்றன்
- உண்மை இதழ், 16-30.11.17
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக