வெள்ளி, 11 டிசம்பர், 2015

மக்கள் ஒருமைப்பாடு பேசுவோரே! கடவுள் ஒருமைப்பாடு எங்கே!


அரியும் சிவனும் ஒண்ணு: இதை அறியாதவர் வாயில் மண்ணு! நெடுங்காலமாய் நம் நாட்டில் வழங்கி
வரும் பழமொழியிது. சிவனுக்கும் திருமாலுக் கும் உயர்வு - தாழ்வு-வேறுபாடு-முரண்பாடு கிடையவே கிடையா தென்று, மதக்குழப்பங்களுக்குள்ளான  மக்கட்கு அறிவு கொளுத்தும் மொழியாக இப்படிச் செப்பினர் சூழ்ச்சி மதியினர் சிலர்.
ஆதிசங்கரர் மேற்கொண்ட சமய நடவடிக்கையான உண்மை இணைப்பில் சைவத்தையும், வைணவத்தையும் உள்ளடக்கவே செய்தார்.
அதன்பின் பல நூறு ஆண்டுகள் கடந்த நிலையிலும் அறிவாசான் அய்யா அவர்கள் தெளிவாகக் கேட்டு வந்தார் மதத் தலைவர்கள் தங்கள் கடவுளர்களைப் பற்றி ஒருமைப்பாடான முடிவுக்கு முதலில் வரமுடியுமா? என்று,
அய்யா சொல் என்றைக்கும் பொய்யாதென்பதற்கு இதோ சான்று:
மொட்டைக் கோபுரம் என்று அழைக்கப்பட்டு வந்த சிறீரங்க பெருமாள் கோவிலின் தென்திசைக் கோபுரத்தை வளரச் செய்வதில் வெற்றி கண்ட அகோபில மடத்தின் 44ஆம் ஜீயர் சிறீ அழகிய சிங்கரிடம் கல்கி இதழ் சார்பில் கேட்கப்பட்ட 87ஆண்டு அகவையாகி விட்ட ஒளிவு மறைவில்லா கேள்வியொன்றுக்குச் சிங்கர் அளித்த விடை சமய மக்களுக்குச் சரியான அறைகூவல்!
கேள்வி: சிறீ சங்கராச்சார்யாள் இந்த கோபுரத்தில் மூன்றாம் கட்டத்துக்குப் பண உதவி செய்திருக்கிறார். பல சைவர்களும் பெருமாள் திருப்பணிகளுக்கு உதவுகிறார்கள். இதுமாதிரி வைஷ்ணவப் பெரியார்கள் சைவ தலப் பணி களுக்கு ஏன் உதவுக்கூடாது?
விடை: நான் சிவன் கோவில்களுக்குச் செய்ய மாட்டேன்... ஏன் என்று கேட்டா.... சிறீமத் நாராயணன் தான் எல்லா தெய்வங்களுக்கும் மேற்பட்ட தெய்வம்னு என்னோட சித்தாந்தம்... பிரம்மாவை நாராயணன் தன் நாபியிலிருந்து படைத்தான். அந்த பிரும்மா சங்கரனைப் படைத்தான் என்று கதையிருக்கு. அதுபடி பார்த்தா சங்கரனுக்கு நாராயணன் பாட்டன் ஆகிறார். தபஸ் பண்ணி பிரம்மா அந்தப் பதவிக்கு வந்தார்னும், அதே போல சிவன் எத்தனையோ யாகம் பண்ணி கடைசியிலே தானும் நெருப்பிலே குதித்துச் சக்தி பெற்றார்னு சாஸ்திரம் இருக்கு, சிவங்கள்ளாம் புண்ணியம் பண்ணி, தபஸ் பண்ணி தெய்வத் தன்மைக்கு உயர்ந்தவர்கள். நாராயணன் எப்போதும் உள்ளவர். அவரை வழிபடற நாங்கள் வேறு தெய்வத்தை வழிபட மாட்டோம். ஏன்னா அங்கே போனா புத்தி கெட்டுப் போகும். நாங்கள்ளாம் மோட்சத்துக்குப் போக டிக்கெட் வாங்கிண்டாச்சு.  அதனாலே சிவன் கோவில் திருப்பணிக்குப் பணம் இருந்தாலும் தரமாட்டேன் (கல்கி 11-4-82) மேற்கண்ட விடை நமக்கு விளக்குவதென்ன?
1. சங்கரனுக்கு நாராயணன் பாட்டன். 2. சிவன் தவம் புரிந்து தெய்வம் ஆனவன். 3 வைணவன் சிவன் கோவிலுக்குச் சென்றால் புத்தி கெட்டுவிடும். 4 வைண வனிடம் பணம் இருந்தால் கூட, சிவன் கோவிலுக்குத் தரக்கூடாது!
ஆக, இன்றைக்கும் கூட அரியும் சிவனும் ஒன்றாகி விட்டார்களா?
குழப்பம் குறையவில்லை; நீடிக்கிறது.  மக்கள் ஒருமைப்பாடு பேசவந்து விட்ட மதக்காவற் காரர்கள் முதலில் கடவுள் ஒருமைப்பாடு காணட்டும்.
- பகுத்தறிவு
-விடுதலை,27.2.15

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக