வெள்ளி, 11 டிசம்பர், 2015

பார்வதி -பரமசிவன் முத்தக் காட்சி!


திருவாக்குஞ் செய்கருமங் கை கூட்டுஞ் செஞ்சொற்
பெருவாக்கும் பீடும் பெருக்கும் - உருவாக்கும்
ஆதலால் வானோரும் ஆனை முகத்தானைக்
காதலாற் கூப்புவர்தங் கை
விநாயகக் கடவுளை வணங்கிக் காரியங்களைத் தொடங்கினால் நல்லது என்று கூறும் பண்டாரச் சன்னதிகளே! வேழ முகத்தானின் வாழ்க்கை வரலாற் றினைப் பாரீர்.
கசமுகாசுரன் என்பவன் தவம் செய்து, தான் மனிதராலும், விலங்குகளாலும், பிறவற்றாலும் காலமெல் லாம் இறவாதிருக்க வேண்டும் என்று வரம் பெற்றான்.  அந்த வரம் பெற்றமையால் அவன் தேவர்களைத் துன்புறுத்தினான்.
தேவர்கள் சிவபெருமானை வேண்ட சிவன் விநாயகனை உண்டாக்க வேண்டும் என்று எண்ணினான். அதனால் தன் துணைவி சக்தி யோடு தோட்டத்திலே வீற்றிருந்தார். அப்பொழுது அங்கே ஓர் ஆண் யானை, பெண் யானையைப் புணர்தல் கண்டு, சக்தி பெண் யானை வடிவங்கொள்ள, சிவன் ஆண் யானை வடிவங் கொண்டு புணர்ந்தார்.
அவர்கட்கு யானை முகமும் மனித உடலுமாக ஒரு குழந்தை தோன்றியது. இதுதான் இன்று ஆற்றின் கரையில் அமர்ந்திருக்கும் கரியின் முகவன் கதை, இதற்கு ஆதாரமாக, திருஞான சம்பந்தர் தனது தேவாரத்தில்-
பிடியத னுருவுமை கொளமிகு கரியது
வடிகொடு தனதடி வழிபடு மவரிடர்
கடிகண பதிவர வருளினன் மிகு கொடை
வடிவினர் பயில்வலி வலமுறை யிறையே
என்று பாடியுள்ளார். இப்படிக் காமத்தின் விளைச்சலால் மக்கள் பிறவியிலிருந்து, விலங்குப் பிறவியெடுத்து இணைந்த பிண்டங்களின் சதைக்கலப்பில் விளைந்த விநாயகன் வணங்க வேண்டிய கடவுளா? இதோடு மட்டுமல்ல, தன்னை ஈன்ற தாயும் தந்தையும் காமக் காய்ச்சல் மிகுதி யினால் உதட்டுச்சுவை பருகும் காட்சியைக் கண்டு மகிழ்ந்தாராம், நெற்றிக் கண்ணனார் பெற்ற மகன்.
மும்மைப் புவனம் முழுதீன்ற முதல்வி
யோடும் விடைப்பாகன் அம்மை தருக
முத்தமென அழைப்ப வாங்கே சிறிதகன்று
தம்மின் முத்தங்கொள நோக்கிச் சற்றே
நகைக்கும் வேழமுகன் செம்மை முளரி
மலர்த்தா ளெஞ்சென்னி மிசையிற் புனைவாமே
மூன்று உலகங்களையும் பெற்ற சக்தியிடத்து, எருதுவை ஊர்தியாக உடைய சிவபெருமான், அம்மையே முத்தம் தருக எனச் சொல்லி அழைக்க அவர்களுக்கு இடையே இருந்த விநாயகன் சிறிது நீங்கிட, சிவனும், பார்வதியும் ஒருவரை யொருவர் முத்தமிட்டு கொள்ள அதனைக் கண்டு புன்னகை செய்யும் யானை முகனது சிவந்த தாமரை மலர் போன்ற திருவடிகளை எமது தலையின் மேல் அணிந்து கொள்வோம் என்று கூறுகிறது நந்திக் கலம்பகம் எனும் நூல்.
பெற்றவர்கள் முயங்கும் போது உற்றுப்பார்த்து மகிழ்ந் திடும் காமவல்லி பெற்ற திருக்குமரன் விநாயகக் கடவுளை வீரமரபில் வந்த தமிழினம் வணங்க வேண்டியது தானா? புராணப் புரட்டர்களின் மூளைச் சுரப்பிலிருந்து உதயமான ஆபாசக் கடவுளுக்கு ஆற்றங்கரையில் சிலை ஏன்? இந்த வெட்கங் கெட்ட உறவில் விளைந்த யானை முகத்தானுக்கு தேங்காய் உடைப்பும், நைவேத்தியமும் ஒரு கேடா? தமிழினமே! சிந்தித்துச் செயல்படு!
- பெரியகுளம் அருளாளன்

சொர்க்கமா - நரகமா?
தன்னை எதிர்த்து பார்லிமென்டிற்குப் போட்டியிடும் ஒருவர் நடத்தும் தேர்தல் கூட்டம் ஒன்றிற்கு ஆப்ரகாம் லிங்கன் சென்றிருந்தார். மேடையில் பேசிக் கொண்டிருந்த பாதிரியார் லிங்கனைக் கண்டதும் அவரை அவமானப் படுத்த வேண்டும் என எண்ணினார்.
லிங்கன், சொர்க்கம் - நரகம் ஆகியவை மீது நம்பிக்கை அற்றவர் என்பது பாதிரியாருக்குத் தெரியுமாகையால், இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்டு சொர்க்கத்திற்குப் போக விரும்புபவர்கள் அனைவரும் தயவு செய்து எழுந்து நிற்கவும் என்றார். ஆப்ரகாமைத் தவிர, எல்லோரும் எழுந்து நின்றார்கள்.
மறுபடியும் பாதிரியார் சொன்னார். நரகத்திற்குப் போக விரும்பாதவர்கள் எழுந்து நிற்கவும் என்றார்.  இப்பொழுதும் லிங்கனை தவிர்த்து எல்லோரும் எழுந்து நின்றார்கள். உடனே பாதிரியார் லிங்கனை பார்த்துக் கேட்டார்.
நீங்கள் எங்கே போக விரும்புகிறீர்கள்? லிங்கன் சொன்னார், நான் பார்லிமெண்டிற்கு போக விரும்புகிறேன், பாதிரியார் வாயடைத்துப் போனார்.

விதியைப் பற்றி...
மனித சக்தி விதி என்ற சங்கிலியால் கட்டுண்டு கிடப்பது, பெரும் பரிதாபமே.
மனிதன் சிந்திக்கச் சிந்திக்க, விதியினின்று விடுதலை அடைகிறான். மனித மூளை சிந்தனையால் விதியை எதிர்த்து, அதை அழித்து, வெறும் பிரமை என்று நிரூ பிக்கவும் ஆற்றல் பெற்றுவிடுகிறது.
பலமற்றவர்கள், பாதகர்கள் - இவர்களே உழைக்காமல் சோம்பலில் மடிந்து, விதியைக் குறை கூறுகிறார்கள்.
- எமர்சன்
-விடுதலை,9.5.14

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக