புதன், 30 டிசம்பர், 2015

கிறிஸ்து கொண்டாட்டமும் மதுக்கூத்தும்



இயேசுநாதர் ஏழை மக்களைக் கொடுமைப்படுத்தப் பிறந்தாரா? நல்வழிப்படுத்த பிறந்தாரா?

கிறிஸ்து மதத்தில் பண்டிகைக்கென்று ஒரு கொண்டாட்ட முண்டு. இக்கொண்டாட்டம் மது அருந்தவே நடத்துகிறார்கள். டிசம்பர் மாதம் 25ஆம் தேதி முதல் ஜனவரி 6ஆம் தேதி வரை கிறிஸ்தவர்கள் உறைவிடம் செய்யுமிடங்களில் போய்க் கண்ணுற்றறால் இதன் உண்மை விளங்கும். இப்பண்டிகையில் நடைபெறும் நாட்டியங்களையும், மது உண்டு மதிமயங்கித் திரிவதையும், இயேசு பெருமான் பிறந்ததற்கு அறிகுறியாக தேவாலயத்தில் ஒரு குடிசைக்கட்டி, அதில் இயேசுகிறிஸ்துவின் தாய் தந்தையர், மூவேந்தர்கள், இடையர்கள் யாவரும் புடை சூழ நடுவில் புல்லணைமீது யேசு பிறந்திருப்பதைக் காட்டி ஏழை மக்களிடம் துட்டுப் பறிப்பதையும் அன்று நள்ளிரல் சில நாடோடிகள் பஜனைபாடித் தெருத்தெருவாய் அலைந்து ஏழை மக்களிடம காசு திருடுவதையும் கத்தோலிக்கரிடையே எடுத்து இயம்புமாறே இதை எழுதலாயினன்.
எம்பெருமான் டிசம்பர் 24ஆம் தேதி நள்ளிரவு கற்பில் சிறந்தகன்னி தாமேரியின் திருவயிற்றில் நின்று பிரசன்ன மானாரென்று பைபிளில் வரைந்திருக்கிறது. பைபிளில் செப்பியபடியே கிறிஸ்தவர்கள் அதை மனுநீதி தவறாது கடைப்பிடித்து ஒழுகுகிறார்கள். இயேசு பிறந்த அன்று அளவு கடந்து கள், சாராயம், ஒயின், பிராண்டி உண்பானேன்? பண்டிகை என்றால் என்ன? மதுபானம் குடிப்பதுதான் பண்டிகையா? மது அருந்தாவிட்டால் பண்டிகையின் டம்பம் குன்றிவிடுமாம்? இயேசு நான் பிறந்த அன்று மது உண்டு மயங்குங்களென்று பறைசாற்றினாரா? இயேசு ஜனங்களை நல்வழிப்படுத்த அவதாரம் செய்தாரா? குடியர்களையும், திருடர்களையும் உற்பத்தி செய்ய அவதாரம் செய்தாரா? இயேசு என் நாமத்தை மக்களிடம் உபதேசித்துப் பணம் கொள்ளையடியுங்களென்று சொல்லவா மானிடராய்ப் பிறந்தார்?
இயேசு உதித்த நள்ளிரவு பூசை முடிந்ததும், பண்டிகையின் பெயரால் ராப்பாடி வேடந்தரித்து, சிறுவர்களை மோட்சத்தி லிருந்து சம்மனசுகள் இறங்கியதுபோல் அலங்கரித்து பஜனைபாடி ஒவ்வொரு இல்லங்களிலும் படிகமெடுத்து ஒவ்வொருவரும் பங்கிட்டு மறுநாள் பண்டிகையைக் கொண்டாடுகிறார்கள்.
ஏழை மக்களிடம் பிச்சையெடுத்து நடத்துவது தான் பண்டிகையின் நோக்கமா? ராப்பாடி வேடந்தரித்துப் பஜனை பாடி வருகிறவர்களைக் கண்டதும் மூட மக்கள் ஆனந்தம் கொண்டு தங்களிடம் ஒன்றுமில்லா விட்டாலும் கடன் பட்டாவது கொடுக்கிறார்கள். பெருமை பொருந்திய பண்டிகையே உன் திருவிளையாடல் தான் என்னே!
ஏழை மக்கள் வறுமைப் பிணியில் நின்று தவிக்கும் வண்ணம் பாதிரிமார்களும், குடிகாரத் தலைவர்களும், பண்டிகையும், உற்சவமும், கோவிலும், மோட்சமும், சடங்கும் கலியாணமும் பிறந்த பிள்ளை ஞானஸ்நானமும், பாதிரிமார் அணியும் காப்பையும், மணியும், மெழுகுவர்த்தியும், வாகனமும், சிமித்தேயும் வருடாவருடம் பணத்தை கொள்ளையடித்துக் கொண்டுபோனால், ஏழை மக்கள் முன்னேறுவதெங்ஙனம்? ஒவ்வொரு நிமிடமும் பண்டிகையும், உற்சவமும் இருந்தால் முன்னேறுவதெக்காலம்? இவ்விதமான ஆபாசங்களையெல்லாம் சுயமரியாதைக்காரர்கள் எடுத்துக் காட்டினால் அவர்களை நாஸ்திகர் என்றும் அவர்கள்
தொலையமாட்டார்களாவென்றும், ரோடுகளிலும், மூலை முடுக்குகளிலும், சந்துபொந்துகளிலும், தியானங்கொடுக்கு மிடங்களிலும், தேவாலயங்களிலும் குலைத்துக்கொண்டு திரிவானேன்? தங்கள் வயிற்றுப் பிழைப்புத் தொலைந்து விடுமென்ற கவலையினால் உளறுகிறார்களோ என்னவோ தெரியவில்லை.
பகுத்தறிவோடு பிரசங்கம் மொழியும் பாதிரிமார் பகுத்தறிவற்றவர்களாயிருந்தால் தேவாலயத்திலும், தியானம் கொடுக்குமிடங்களிலும் கடல்மடை திறந்தாற்போல் பிரசங்கம் பொழிய முடியுமா? தேவாலயத்தில் மக்களுக்கு ஊட்டும் ஆஸ்தீக பிரசங்கத்தில் பண்டிகை உற்சவம் நடத்தாவிட்டால் பாவம், மோட்சம் அடையாவிட்டால் பாவம், ஞானஸ்நானம், பாவசங்கீர்த்தனம், அவஸ்தை பூசல் பெறாவிட்டால் பாவம், காணிக்கை செலுத்தாவிட்டால் பாவம், வாகனம் எடுக்காவிட்டால் பாவம், ஞாயிறு வாரம் பூசை காணாவிட்டால் பாவம், ஆஸ்தீக ஞானப்பாலைப் படிக்காவிட்டால் பாவம் என்று கூறும் பாதிரிமார், கல்வி கல்லாவிட்டால் பாவம், அறிவிற்குப் பொருத்தமற்றவைகளை கண்மூடித்தனமாய் நம்புவதும், கொண்டாடுவதும், பிறரை ஏமாற்றுவதும் பாவமென்றும்கூற ஏன் தயங்குகிறார்கள்? பின் வாங்கு கிறார்கள்? தங்கள் வயிற்றுப் பிழைப்பு பாழடைந்து விடுமென்ற பயமா? அச்சமா? அல்லது பாமரமக்கள் கல்வி கற்றால் நம் புரட்டையறிந்து தாய்நாட்டுக்குயனுப்பி விடுவார் களென்ற ஏக்கமா? திருடுவது பாவம், பிற தாரத்தை அபேட்சிப்பது பாவமென்று கூறும் பாதிரிமார், ஏழை மக்களின் பணத்தைக் கொள்ளை யடிப்பானேன்?  குடிகாரத் தலைவர்களுக்கு பங்கு கொடுப்பானேன்? உள்ளொன்று வைத்துப் புறமொன்று கூறுவதுதான் குருத்துவத்தின் தன்மையா? துறவறத்தின் மகிமையா? பண்டிகையின் பெயராலும், உற்சவத்தின் பெயராலும் வருடா வருடம் சம்பாதிக்கின்ற பணத்தைப் பாழாக்கினால் ஏழை மக்கள் முன்னேறுவதெப்படி? பெண்டு பிள்ளைகளைக் காப்பதெவ்விதம்? நாடோறும் ஜீவனம் செய்வதெவ்விதம்? பகுத்தறிவுள்ள மக்களாய் வாழ்வ தெக்காலம்?                                   (குடிஅரசு)
-விடுதலை,18.12.15

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக