என்பதற்குச் சமாதானம் கூறுவார்கள் - நான் கூடக் கூறினேன் - என்னை அரக்கராக்கிய இந்த அறிஞ ரைக் கேட்கிறேன் - இவர்கள் யார்? அதோ, துரோணாச்சாரி - எவ்வளவு இரக்கமுள்ள மனம், அவருக்கு! மனதாலே, குருவாகப் பாவித்து பதுமை செய்து வைத்து வணங்கிய, வேடர் திலகன் ஏகலைவனை, காணிக்கை கேட்டாரல்லவோ, கைக் கட்டை விரலா - வலது கையாகப் பார்த்து - எவ்வளவு இரக்க சுபாவம்! ஏன் ஆச்சாரியராக்கப்பட்டார். என்னை ஏன், அரக்கனாக்கினீர்? துரோணர்: (துடித்தெழுந்து) நான் கேட்டால், அவன் கொடுக்க வேண்டுமோ! நானா வெட்டி எடுத்துக் கொண்டேன், அவன் கை கட்டை விரலை? இராவணன்: அவனுடைய தொழிலுக்கும் வில் வித்தைக்கும் எந்தக் கை கட்டை விரல் ஆதாரமோ, அதைக் கேட்டீர், காணிக்கையாக. துளியாவது மனதிலே இரக்கம் இருந்தால் கேட்பீரா! அவனாகத் தானே கொடுத்தான் . என்று வாதாடுகிறீர். அவன் ஏமாளி அல்ல.
உமது கொடுமை கால முழுவதும் உலகுக்குத் தெரியட்டும், ஒரு கட்டை விரல் போனாலும் பாதகமில்லை என்று எண்ணி னான். துரோணர்: அவனாகக் கொடுத்தான் - அவனாகவே தான் கும்பிட்டுக் கூத்தாடினான், குருவே, குருவே, என்று. இராவணன்: அந்த அன்பு கண்டு, நீர் உமது குணத்தைக் காட்டி விட்டீர். கட்டை விரலைக் காணிக்கைக் கேட்டபோது என்ன எண்ணினீர் மனதில். அவன் மறுப்பானா, மறுத்தால் அவனுடன் மல்லுக்கு, நிற்கலாம் - கொல்லலாம் என்று சூதாக எண்ணினீர் - துரோணாச்சாரியே, அவன் உம்மைத் தோற்கடித்தான். அவன் இழந்தது கைவிரல் - நீர் இழந்தது கண்ணியம், கவனமிருக்கட்டும் - இரக்கமற்ற நெஞ்சுடையவர் நீர், என்பதை உலகுக்கு உரைத்தான் அந்த உத்தமன் - சொல்லால் அல்ல - செயலால். அவன் விரல் வெட்டப்பட்டபோது இரத்தம் கொட்டிற்றே.
அதைக் கண்டாவது இரக்கம் பிறந்ததோ உமக்கு? துரோணர்: (நீதிதேவனைப் பரிதாபமாகப் பார்த்து) நீதிதேவா! எங்களை வரவழைத்து, அவ மானப்படுத்தவே, இந்த விசாரணையை நடத்து கிறீரோ என்ன? எப்படி இதை நாங்கள் சகிப்போம்? நீதிதேவன்: நான் என்ன செய்ய? குற்றவாளி எனக் கருதப் படுபவனுக்கு, தாராளமாகப் பேச நமது மன்றம் உரிமை தந்தாக வேண்டுமே. (இலங்கே சனைப் பார்த்து) இலங்காதிபா! ஏன் இவர்களை ஏசுகிறீர்? இவர்களிடம், நம்பிக்கை இல்லை என்று பொதுவாகக் கூறிவிடுமே! இராவணன்: நீதிதேவா நான் மறு விசாரணைக்கு இசைந் ததற்குக் காரணமே, புது உண்மைகள் தெரியச் செய்ய வேண்டும் என்பதுதான் - விடுதலை கோரி அல்ல - எந்தக் குற்றத்தை என் மீது ஏற்றி, என்னை அரக்கராக்கிக் காட்டினாரோ, அதே குற்றத்தைச் செய்தவர்கள், மகரிஷிகளாய், ஆச்சாரி யர்களாய்.... இதோ... (கோட்புலியைக் காட்டி) நாயனா ராய் - உயர்த்திப் பேசப் படுகிறார்களே, இது சரியா என்று கேட்கிறேன். ஏசி இவர்கள் மனதைப் புண்படுத்த அல்ல.
இதோ கொலு வீற்றிருக்கிறாரே கோட்புலி நாயனார்... நீதிதேவன்: ஆமாம், சிவபக்தர். இராவணன்: உண்மை - சிவபக்தர் பெரிய போர்வீரர் கூட - இன்று நாயனார் கம்பர்: செந்தமிழில் சேக்கிழார் இராவணன் : செய்திருக்கிறார் பல செய்யுட்கள், இவருடைய சீலத்தை விளம்பரப்படுத்த.
கோட்புலி : ஈசா! யானோ விளம்பரம் தேடுபவன்? கைலைவாசா! ஏனோ இத்துஷ்ட சிகாமணி என்னை ஏசக் கேட்டும், உன் நெற்றிக் கண்ணைத் திறந்திடக் கூடாது. இராவணன் : அய்யன், வேறு ஏதேனும் அவசர அலுவலிலே ஈடுபட்டிருக்கக் கூடும் - அடியவரே! பிறகு மனுச் செய்து கொள்ளும். நீதிதேவன்: சரி, சரி.. இங்கு இலங்கேசனா கோர்ட் நடத்துகிறார். இராவணன்: இல்லை, தேவா! குற்றவாளிக் கூண்டிலுள்ள நான் என் குறையைக் கூறிக் கொள்கிறேன். வேறொன்றுமில்லை. அய்யா! கோட்புலியாரே! நீர் ஒரு கொலை பாதகரல்லவா? கோட்புலி: (காதுகளைப் பொத்திக் கொண்டு) சிவ; சிவா! கூசாது கொடு மொழி புகல்கிறான் - கேட்டுக் கொண்டிருக்கிறீரே, தேவா. விசுவாமித்திரர்: (கோபித்து எழுந்து நின்று.) நன்று நீதிதேவா, கோட்புலிக்காக மட்டும் இரக்கம் காட்டுகிறீரோ - இது தான் நியாயமோ! இலங்கேசன், நாங்கள் இரக்கமற்றவர்கள் என்று விளக்குவதற்குப் பல கூறினதுபோல், கோட்புலி பற்றியும் கூறட்டுமே, நாயனாருக்கு மட்டும் பாதுகாப்போ? நாங்கள் கிள்ளுக்கீரையோ! நீதிதேவன்: பொறுமை, பொறுமை. இலங்கேசன் இஷ்டம் போல பேசட்டும். கோட்புலியாரே! பதில் கூறும். கோட்புலி: நானா? இவனுக்கா, நாதனின் நல்ல ருளைப் பெற்ற நானா முடியாது...
இராவணன்: எப்படி முடியும் என்று கேட்கிறேன். ஒரு செல்வவான் மூன்றடுக்கு மாடி மீது உலவுகிறான், அவனைக் கண்டோர் அறிவார்களா, அவன், வஞ்சனை, பொய், களவு, எனும் பல படிக்கட்டுகளை ஏறித்தான், சுகபோகம் தரும் அந்த மூன்றாம் மாடிக்கு, வந்தான் என்பதை. இல்லையல்லவா! அதுபோலவே தான், இதோ இங்கு நாயனாராகக் காட்சிதரும் அந்தக் கோட்புலி, பிணங்களின் மீது நடந்து, இங்கு வந்து சேர்ந்தவர். கோட்புலி: பித்தமோ? அன்றி, வார்த்தைகள் யாவும் வெறும் சத்தமோ?
இராவணன்: கோட்புலியாரே, நீர் ஓர் சிவ பக்தர்தானே? கோட்புலி : ஆம், அதற்கும் தடையோ, அரனடியானே யான். இராவணன்: அறிந்தே கேட்டேன் அடியவரே! சிவபக்தியால் நீர் செய்தது என்ன? கோயில் கோயி லாக ஓடினீர், அருள் கிடைத்தது. அதை அல்ல நான் கேட்பது. ஒரு காலத்தில் உமது மாளிகையிலே, ஏராளமாக நெற்குவியல் சேகரித்து வைத்திருந்தீரே.
கோட்புலி: ஆ.. மா... ம். அது.. வா. விசுவாமித்திரர்: ஏன், இழுத்துப் பேசுகிறீர், பொருள், களவோ? இராவணன்: இல்லை, முனிவரே! அவ்வளவு சாமான்யமான குற்றத்தையா இவ்வளவு பெரியவர் செய்வார்? நெல் இவருடையதே. கோயிலுக்கு என்று சேகரித்து வைத்திருந்தார். ஒரு சமயம் அதற்காக ஊரைவிட்டுச் சென்றார் - கடுமையான பஞ்சம் ஊரிலே அப்போது ஏற்பட்டது. அதன் கொடுமை தாங்கமாட்டாமல், மக்கள் ஏராளமாக மடியலாயினர். நீதிதேவன்: அதற்கு இவர் என்ன செய்வார்? விசுவாமித்திரர்: ஏன், சிவபக்தர் பஞ்சத்தைத் தடுத்திருக்கக் கூடாது என்று கேட்கிறார் இலங் கேசன்? இராவணன்: இல்லை, இல்லை, அவ்வளவு பெரிய காரியத்தை நான் எப்படி இவரிடமிருந்து எதிர் பார்ப்பேன். நான் சொல்வது வேறு. அந்தப் பஞ்சம், இவருடைய பண்டகசாலையில் தேக்கி வைக்கப்பட்டி ருந்த உணவுப் பொருள் கிடைத்தால் தலை காட்டியிருக்காது. மக்கள் மடியமாட்டார்கள்.
பிணம் கீழே வீழ்ந்தது - இவர் கிடங்கிலே நெல் மூட்டைகள் ஏராளம். உணவுக்காக வெளியே திண்டாட்டம் - உள்ளே நெற்குவியல் குன்று போல. நீதிதேவன்: விவரம் குறைத்து... இராவணன்: விஷயத்தைக் கூறுகிறேன். பஞ்சத்தில் அடிபட்ட மக்கள், கிடங்கிலிருந்து உணவுப் பொருளை எடுத்துக் கொண்டனர். கோட்புலி: (கோபமாக) என் உத்தரவின்றி - நான் ஊரிலில்லாத போது - சிவகாரியத்துக்கென்று இருந்த என் செந்நெல்லைக் களவாடினர். இராவணன்: களவு அல்ல! பகிரங்கமாகவே எடுத்துக் கொண்டனர் - எண்ணற்ற மக்களின் உயிரைக் காப்பாற்ற - பிறகு தந்து விடுவோம் என்று எண்ணி.
கோட்புலி : கொள்ளை அல்லவா அது? இராவணன்: கிடங்கிலே நெல்லை, பஞ்ச காலத்தில் குவித்துக் கொள்வது? நீதிதேவன்: அதுவும் குற்றம்தான். இராவணன்: இதற்கு நீர் செய்ததென்ன? கோட் புலியாரே! அன்பே சிவம்! சிவமே அன்பு - அந்தச் சிவத்துக்கு நீர் அடியவர் - அடியாரே! பட்டினிப் பட்டாளம் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள நெல்லை எடுத்துக் கொண்டனர். சிவத்தொண்டராம் தாங்கள் என்ன செய்தீர்? பரசுராமர் : நியாயமான கேள்வி? நானாவது என் தகப்பனாரின் சொல்லைக் கேட்டு தாயின் தலையை வெட்டினேன் - கோட்புலி செய்தது எனக்கும் கேள்வி தான். ரொம்ப அக்ரமம், ஈவு இரக்கமற்ற செயல்.
இராவணன்: அதுதான் முக்கியம். இரக்கமற்ற செயல். சிவசொத்து, அந்த நெல். அதை யார் தின்றார் களோ அவர்களெல்லாம் சிவத் துரோகிகள். சிவத்துரோகிகளின் சிரத்தை வெட்டாது விடேன் என்று சீறினார். இந்தச் சிவபக்தர்... இல்லையா கோட்புலியாரே? சீறினார் - சீவினார் தலைகளை... பரசுராமர்: பலரைச் சிரச் சேதம் செய்தார். மகாபாபம், ரொம்ப அக்கிரமம்! நான் தாயை மட்டும் தான் கொன்றேன். அதுவும் தகப்பன் பேச்சை எப்படித் தட்டி நடப்பது என்ற காரணத்தால். இராவணன்: இவருக்கு யாரும் கட்டளையிடவில்லை தலைகளைச் சீவச் சொல்லி! கொன்றார் கொன்றார், ஆண்களையும் பெண்களையும் கொன்றார், இரக்கம் துளியுமின்றிக் கொன்றார் - பதைக்கப் பதைக்கக் கொன்றார் - வேண்டினர், கொன்றார்.
காலில் வீழ்ந்தனர். கொன்றார் - கொன்று தீர்த்தார் சகலரையும் - தேவா! குற்றவாளி என்று என்னைக் கறைபடுத்திய கம்பரே! இவர் செய்தார் இக்கொடுமை. விசாரணை உண்டா? இல்லை குற்றம் சாட்டவில்லையே!! குற்றம் சாட்டாதது மட்டுமா, இத்தனை கொலைகளைத் தன் பொருட்டு செய்தாரே, இந்தப் பக்த சிகாமணி என்று மகிழ்ந்து, கைலைக் குன்றி லுள்ள முக்கண்ணன், இவருக்கு அருள் பாலித்தார். நீதிதேவன்: கொடுமைதான். இராவணன்: அது போது, உயிருக்குப் பயந்து அந்த மக்கள் எவ்வளவு கெஞ்சி இருப்பர் - கோட்புலியாரே? எம்மைக் கொல்லாதீர் - உமது காலில் வீழ்கிறோம், வேண்டாம் - தயவு செய்க - எல்லாம் அறிந்தவரே! ஏழைகள் பால் - இரக்கம் காட்டும், என்று எவ்வளவு கெஞ்சியிருப்பர்! விசுவாமித்திரர் : என்னப்பா, அக்கிரமம். அலறித் துடித்து அழுது புரண்டுதான் இருப்பர். கல்லும் உருகுமே அந்தக் கூக்குரலைக் கேட்டால்...
பரசுராமர்: இவ்வளவு பேரைக் கொன்றும் ஆத்திரம் அடங்கவில்லை ?
தொடரும்....
- விடுதலை நாளேடு, 25.11.18