வியாழன், 15 நவம்பர், 2018

அறிஞர் அண்ணாவின் நீதிதேவன் மயக்கம் 3

கொலுமண்டபத்திலே கொட்டி அளந்தான் விபீஷணன்! தம்பீ! உனக்குத் தாசர் புத்தி தலைக்கேறி விட்டதடா! என்று கூறி உட்கார வைத்தேன். இரக்கம் காட்டவில்லை.
போதுமா?. . . இன்னமும் ஏதாகிலும் கூறட்டுமா! ஈரமற்ற நெஞ்சினன் நான் என்பதற்கான ஆதா ரங்கள்! இதேது, அரக்கன் முரடன் மட்டுமில்லை முட்டாளாகவுமன்றோ இருக்கிறான்! எதிர்க்கட்சிக் காரன் கூறுவதை விட ஆணித்தரமாகக் குற்றப் பட்டியலைத் திட்டமாகக் கூறுகிறானே என்று யோசிக்கிறீர்களா?
இன்னமும் கொஞ்சம் செந்தேன் ஊற்றுகிறேன், உங்கள் சிந்தனைக்கு.
களத்திலே என் தம்பி மாண்டான்; கதறினர் மக்கள். என் மகன் மாண்டான்; மண்டோதரி மாரடித்து அழுதாள். என் மக்களின் பிணம் மலையாகக் குவிந்தன. எங்கும் இரத்தம்! எங்கும் பிணம்! நாசம் நர்த்தனமாடிற்று. அயோத்தியான் ஏவிய அழிவு, ஆழிசூழ் இலங்கையில் இடம் பிடித்துக் கொண்டது. கானமும் கட்டளையும், ஏவலரின் பணிவான பேச்சும், காவலரின் கெம்பீரமான முழக்கமும், எந்த இலங்கையிலே நித்திய நாதமாக இருந்ததோ, அங்கு குடலறுந்தோர் கூக்குரல், கரமிழந்தோர் கதறல்; பெண்டிரின் பெருங்குரல்; பிணங்களைக் கொத்த வந்த பெரும் பறவைகளின் சிறகொலி இவை நிரம்பின. நான் இரக்கம் காட்டினேனா? அதுதான் இல்லை.
(இராவணன், படபடவென்று பேசியவன், கொஞ்சம் களைத்து உட்கார்ந்தான். கோர்ட்டாரின் உத்தரவின் பேரில் அவனுக்கு ஒரு கோப்பையிலே சோமரசம் தருகிறார்கள். இராவணன் புன்னகை யுடன் மறுத்துவிடுகிறான்.)
என் அரசு உலர்ந்தது, அது தெரிந்து என் உற்சாகம் உலர்ந்தபோது, இது போல் ரசம் நான் பருகிடவில்லை . பழிவாங்குதல் எனும் பானத் தையே விரும்பினேன். இரக்கம் என்ற ஒரு பொருள் இல்லா அரக்கன்! கம்பரே! இதுதானே உமது கவிதா நடையிலே உள்ள வாசகம்? என் மீதுள்ள குற்றச்சாட்டு! இராவணன் ஏன் அழிக்கப் பட்டான். அவன், இரக்கம் என்ற ஒரு பொருள் இல்லா அரக்கனானபடியால்! - மிகச் சுருக்கமாக முடித்து விடுகிறீர் கவியே!
நான், என் மீது குற்றம் சாட்டுபவருக்குச் சிரமம் அதிகம் இருக்கக் கூடாது என்பதற்காகத்தான், எந்தெந்த சமயத்திலே நான் இரக்கமின்றி நடந்து கொண்டேன் என்ற விஷயங்களைக் கூறினேன்.
கம்: எங்களால் கூட முடியாது - அவ்வளவு தெளிவாகக் கூற!
இரா: இதைவிடத் தெளிவாக இருக்கும்... இனி என்னுடைய பதில்!
நீதி: பல சமயங்களில் இரக்கமின்றி நடந்து கொண்டதை விவரமாக எடுத்துக் கூறிய பிறகு பதில் என்ன இருக்கிறது தெரிவிக்க?
இரா: பதில், ஏராளமாக இருக்கிறது. அநீதியுடன் நடந்தாக வேண்டும் என்று தீர்மானிக்கும் வழக்கு மன்றங்களைக் கூட, நீதியின் பக்கம் இழுக்கக் கூடிய அளவுக்குப் பதில் உண்டு - கேளுங்கள்! இரக்கம் காட்டவில்லை நான் ... யாரிடம்? ஒரு பெண்பாலிடம்! அபலையிடம்! ஏன்? அரக்க னல்லவா நான்! இரக்கம் என்ற ஒரு பொருள்தானே கிடையாது, கம்பர் கூறியதுபோல்! கம்பர் கூறுவ தானாலும் சரியே. . . தாங்கள் கூறினாலும் சரியே! இரக்கம் என்றால் என்ன? இலட்சணம் கூற முடியுமா? இன்னவிதமான நிலைமைக்குத்தான் இரக்கம் என்று பெயர் என்று திட்ட வட்டமாகக் கூறமுடியுமா?
கம்: இலங்காதிபதி வழக்கு மன்றத்திலே நிற் கிறார்; பள்ளிக்கூடத்திலே அல்ல!
இரா: நீதியின் கூட்டத்திலே நிறுத்தப்பட்டிருக் கிறேன். ஆகவேதான் என் மீது சாட்டப்பட்ட குற்றத்தின் தன்மையை, குற்றம் சாட்டுபவர்கள் முதலில் அளக்க வேண்டும் என்று கேட்கிறேன். உங்களுக்குத் தண்டிக்க மட்டும் தான் தெரியும்? விளக்கவும் தெரிய வேண்டுமே! கூறுங்கள்... இரக்கம் என்றால் என்ன? எது இரக்கம்? உங் களைக் கேட்கிறேன், உங்களை! ஏன் ஊமையாகி விட்டீர்கள்? இரக்கம் என்றால் என்ன பொருள்?
நீதி: இரக்கம் என்றால் பிறருடைய நிலைமை கண்டு வேதனையைக் கண்டு பரிதாபப்படுவது, மனம் இளகுவது, இளகி அவர்களுக்கு இதம் செய்வது. ...
கம்: இதம் செய்யாவிட்டாலும் போகிறது; இன்னல் செய்யாமலாவது இருப்பது. இரா: அதாவது... தன்னால் என்ன வேண்டு மானாலும் செய்ய முடியும் என்ற ஆதிக்கம் இருக்க வேண்டும். அந்த ஆதிக்கத்தைக் கண்டு அஞ்சு பவன் ஒருவன் இருக்கிறான். அவனால் ஆதிக்கக் காரனை எதிர்க்கவோ தடுக்கவோ முடியாது. அந்த நிலையிலே அவன் இருக்கும் பரிதாபகரமான, உதவியற்ற நிலைமையைக் கண்டு மனம் உருகுவது, அவனுக்குக் கேடு ஏதும் செய்யாதிருப்பது. கூடுமானால் அவனுக்குள்ள கஷ்டத்தைப் போக்குவது - இது தானே இரக்கம்?
கம்: மகா பண்டிதனல்லவா! அருமையான வியாக்யானம் செய்துவிட்டாய், இரக்கம் என்ற தத்துவத்திற்கு.
இரா: தாகவிடாயால் தவித்துக் கொண்டிருக் கிறது ஒரு புள்ளிமான். அடவியிலே நீர் தேடி அலைகிறது... அந்த நேரத்திலே சிறுத்தை ஒன்று மானைக் கண்டுவிடுகிறது. மான் மிரள்கிறது; சிறுத்தை அதன் நிலை கண்டு மனம் இளகி, பாவம்! இந்த மானைக் கொல்லலாகாது என்று தீர்மானித்து, இரக்கப் பட்டு, மானை அருகாமையிலுள்ள நீர் நிலையத்துக்கு அழைத்துச் சென்று, அது நீர் பருகும் போது வேறு துஷ்ட மிருகத்தால் ஒரு தீங்கும் நேரிடாதபடி காத்துக் கொண்டி ருக்கிறது. அதுதானே இரக்கம்.?
கம்: சிலாக்கியமான இரக்கம்! ஆனால் சாத் தியமா என்பது வேறு விஷயம்.
இரா: மானை அம்பு எய்திக் கொல்ல வரு கிறான் வேடன்.... வேடனுக்கு இரக்கத்தின் மேன்மையை எடுத்துக் கூறி தவசி தடுக்கப் பார்க்கிறார். வேடன் என்ன செய்வான்?
கம்: வேடனா! அவன் தவசியின் பேச்சைத் தள்ளி விடுவான். முரடனல்லவா அவன்?
இரா: முரடனாக மட்டுமா இருக்கிறான்? ஞானக் கண்ணிலாக் குருடன். . .
கம்: வாஸ்தவம்! வாஸ்தவம். ...
இரா: அந்த முரடன், குருடன், ஊமையல்லன்! அவன் என்ன செய்வான் தெரியுமா, தவசியைப் பார்த்து? முனிபுங்கவரே! என் தொழில் காட்டிலே வேட்டையாடுவது. இந்த மானை நான் கொன்றால்தான் இன்றைய வாழ்வு எனக்கு! இரக்கமில்லையா... என்று கேட்கிறீர். தவசியே! பரமனையே நோக்கித் தவம் புரியும் உமது கூட்டத் தவர் யாகங்களிலே, ஆடுகளைப் பலியாக்கு கிறீர்களே, அந்தச் சமயம் இரக்கம் என்ற ஒரு பொருள் உம்மை விட்டுப் போய்விடும் காரணம் என்ன? என்று கேட்பான். கேட்டான் என்று கருதுவோம். முனிவர் என்ன சொல்வார்?
கம்; முட்டாளே! யாகம் பகவத் ப்ரீதிக்கான காரியம் என்று கூறுவார்.
இரா: இறைவன் வழிபாட்டுக்கான காரியத்துக் கும், இரக்கம் என்ற பண்புக்கும் பகையா... ஸ்வாமி!, என்று வேடன் கேட்பானே! நீதி: கற்பனைக் காட்சிகள் ஏன்? உன் கட்சி யைக் கூறு. இரக்கம் என்றால் பிறர் கஷ்டப்படுவது கண்டு மனம் இளகுவது. அந்த உயரிய பண்பு உன்னிடம் இல்லை . . . இருந்ததா?
இரா: இல்லை! நானே கூறினேனே, எந்தெந்தச் சமயங்களிலே இரக்கம் கொள்ளவில்லை என் பதை. நான் இரக்கப்பட்டேன் என்று புளுகு பேசித் தப்பித்துக் கொள்ள விரும்பவில்லை . என் வாதம் வேறு. . .
நீதி: அது என்ன வாதம்? கூறும். ... கேட்போம்!
இரா: இரக்கம் - எனக்கு இல்லை என்று கூறி, அந்த ஒரு பொருள் இல்லாத நான், அரக்கன் என்று கூறி, அரக்கனான நான் அழிக்கப்பட்டது; இரக்கம் எனக்கு இல்லாததால்தான் என்று பேசுகிறார்களே, அது வீண் அபவாதம்! ஏனெனில், ஒருவனுடைய சிந்தனையும், செயலும் அவன வனுடைய தொழில், வாழ்க்கை முறை, இலட்சியம் என்பனவற்றைப் பொறுத்திருக்கிறது... அந்த நிலை யிலே, கருணாகரன் என்று புகழப்படுபவர்களும் கூட பல சமயங்களிலே இரக்கமற்று இருந்திருக் கிறார்கள். இரக்கம் இல்லாதார் அரக்கர் என்றால் அனைவரும், ஆண்டவன் உட்பட அனைவரும் அரக்கர்தாம். ... நீதி: விசித்திரமான வாதமாக இருக்கிறது. இரா: வேடன், இரக்கத்தைக் கொள்ள முடியாத தற்குக் காரணம் அவனுடைய வாழ்க்கை முறை, தொழில்! வேதமோதி வேள்வி நடாத்தும் முனி வர்கள், யாகப் பசுக்களைச் சித்திரவதை செய்யும் போது இரக்கம் காட்டாதது, அவர்கள், இரக்கம் என்பதைவிட, பக்தி என்ற வேறோர் இலட்சி யத்துக்கு அதிக மதிப்பு தருவதே காரணம். வேடனின் வாழ்வும், வேத மோதியின் உயர்வும் அவரவர்க்கு இரக்கத்தைவிட அதிக அவசிய முள்ளதாகத் தெரிகிறது. ஆஸ்ரமங்களிலே உள்ள மான் தோல் ஆசனங்கள், இரக்கத்தின் அடை யாளச் சீட்டுகளா? வித விதமான யாகங்கள், இரக்க லட்சியவாதிகளின் செயலா? எங்கே இரக்கம்? ஏன் இல்லை? அவர்கள் அரக்கரல்லவா? நான் மட்டுமா அரக்கன்?
கம்: தபோதனர்களை அரக்கராக்கி விட்டார் இலங்கேசன்! இனி, தயாபரனையும் குற்றம் சாட்டுவார் போலும்!
தொடரும்
-விடுதலை நாளேடு,15.11.18

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக