சனி, 17 நவம்பர், 2018

அறிஞர் அண்ணாவின் நீதிதேவன் மயக்கம்- 5

5




(‘பூலோகத்திலே புதுக்கருத்துக்கள் பரவிவிட் டனவாம்’ பழைய நிகழ்ச்சிகளுக்கு நாம் கூறின முடிவுகள், தீர்ப்புகள் தவறு என்று புகார் கிளம்பி விட்டது. ஆகவே, இனிப் பழைய தீர்ப்புகள் செல்லு படியாகா என்று கூறிவிடுவார்கள் போலிருக்கிறது. இதை உத்தேசித்து, புனர் விசாரணைக் கோர்ட் நியமித்திருக்கிறேன்’ என்று ஆண்டவன் அறிவித்தார். நீதிதேவன் வழக்கு மன்றத்தைக் கூட்டினார். முதல் புனர் விசாரணையாக, இராவணன் வழக்கு எடுத்துக் கொள்ளப்படுகிறது. கம்பர், ‘பழைய கோர்ட் தீர்ப்பின் படி இராவணன் குற்றவாளிதான். இலங்கை அழிந்தது நியாயமே. இராவணன் இரக்க மற்ற அரக்கன்’ என்று நீதிதேவனிடம் சமர்ப்பிக்கிறார். இராவணன் தன் வழக்கைத் தானே நடத்த இசைகிறான், கோர்ட்டிலே, நீதிதேவன் தலைமை தாங்குகிறார். கம்பர், ஓலைச் சுவடிகளுடன் தயாராக இருக்கிறார். சாட்சிகளாகச் சூர்ப்பனகையும், கைகேயியும் ஆஜராகியுள்ளனர். இராவணன், எப்போதும் போலவே கெம்பீரமாக வருகிறான். வழக்கு ஆரம்பமாகிறது.)


கைகேயி: தோன்றிற்று... ஆனால் பரதன் நாடாள்வதாக இருந்தால் இராமன் காடேகத்தான் வேண்டும் என்று தீர்மானித்தேன்... வேறுவழியில்லை.


இராவணன்: பஞ்சணையில் துயிலும் இராமன் பசும் புல் தரையிலே படுப்பான், கனகமணி அணிந்தவன் மர உரி தரிப்பான்; இராஜபோஜனம் உண்டவன் காய்கனி தின்பான்; வசிஷ்ட்டரைக் கண்டு களித்த கண்களால், துஷ்ட மிருகங்களைக் கண்டு கலங்குவான்; அரசாள வேண்டியவன் விசாரத்திலே-வேதனையிலே மூழ்குவான் என்று தெரிந்திருந்தும்.


கைகேயி: காடு ஏகத்தான் வேண்டும் என்று கூறினேன்.


இராவணன்: இராமன் காடு ஏகுவான் என்ற நிலை வந்ததும், அயோத்தியிலே இருந்தவர்கள் எப்படியானார்கள்?


கைகேயி: சொல்ல முடியாத அளவிற்குக் கஷ்டப்பட்டார்கள்.


(கம்பரைப் பார்க்கிறாள்.)


இராவணன்: கம்பர், அதுபற்றி விவரமாகப் பாடி இருக்கிறாரே, என்கிறீரா? நான் அவருடைய கவிதை சிலவற்றிலிருந்து குறிப்பு வாசிக்கிறேன். அவை உண்மையா என்று பாரும்; முடியுமானால் கூறும்...


(ஒலையைப் புரட்டிக் கொண்டே) அயோத்தியா காண்டம்; நகர் நீங்கு படலத்திலே, ஊரார் துயரைக் கம்பர் உள்ளம் உருகும் முறையிலே இருபது பாடல்களுக்கு மேல் வர்ணித்திருக்கிறார்.


‘இராமன் காடு செல்வான்’ என்ற சொல் காதிலே வீழ்ந்ததோ, இல்லையோ அரசரும் அந்த ணரும், மற்ற மாந்தரும் தசரதனைப் போலவே துயருற்றுக் கீழே சாய்ந்தார்களாம். . . புண்ணிலே நெருப்பு பட்டது போலிருந்ததாம் அந்தச் செய்தி. மாதர்கள், கூந்தல் அவிழப் புரண்டு அழுதனராம்! அடியற்ற மரமெனக் கீழே வீழ்ந்தனராம்! ‘அம்மே, கைகேயி’ என்று கம்பர் பாடுகிறார்.


“கிள்ளையொடு பூவையழுத கிளர்மாடத்


துள்ளுறையும் பூசையழுத வுருவறியாப்


பிள்ளையழுத பெரியோரை யென்சொல்ல


வள்ளல் வனம்புகுவா னென்றுரைத்த மாற்றத்தால்”,


வள்ளலாம் இராமன் வனம் புகுவான் என்ற வார்த்தையைக் கேட்ட அளவிலே, கிளியும் நாகணவாய்ப்பட்சியும், வீடுகளிலே வசிக்கும் பூனைகளும், உருவத்தை அறியாத சிறு குழந்தை களும் அழுதன என்றால், பெரியவர்கள் அழுத்து பற்றி என்னவென்று சொல்வது என்று கம்பர் பாடியிருக்கிறார். கம்பரே! தங்கள் பாட்டுக்கு நான் கூறிய பொருள் சரிதானே?


கம்பர்: உண்மையே! இராகவன் காடு செல்கிறான் என்று கேள்விப் பட்டவுடன் பட்சி களும் பூனைகளும் குழந்தைகளும் கூட அழுதன என்று பாடினதுண்டு. ஏன், இன்னொரு பாடலும் உண்டே...


“ஆவுமழுதவன் கன்றழுதவன் றலர்ந்த


பூவுமழுத புனற்புள்ளழுத கள்ளொழுகுங்


காவுமழுத களிறழுத கால்வயப்போர்


மாவுமழுதன வம்மன்னவனை மானவே”


என்றும் பாடியிருக்கிறேன்.


நீதிதேவன்: இராவணன் கூறினதை விட, இந்தப் பாடல் கொஞ்சம் கடினம்!


இராவணன்: எளிதாக்கி விடலாம் நீதிதேவனே!


‘ஆவும் அழுத, அதன் கன்று அழுத, அன்று அலர்ந்த பூவும் அழுத, புனல் புள் அழுத, கள் ஒழுகும் காவும் அழுத, களிறு அழுத, கால்வயப் போர் மாவும் அழுத, அம்மன்னவனை மானவே’ - இதுதான் கவிதை. ஆவும், காவும், மாவும், களிறும், இப்படிப் பலவற்றைக் கவி சந்திக்கச் செய்ததாலே கொஞ்சம் சிரமமாக ஆகி விட்டது கவிதை! அழுத என்பது இடையிடையே அடிக்கடி வருகிறது, ஒரே பொருள் உணர்த்த கவிதையின் பொருள் இதுதான் - அந்தத் தசரத மன்னவனைப் போலவே பசு, அதன் கன்று, அன்று மலர்ந்த புஷ்பம், நீரிலே வாழும் பறவைகள், தேன் பொழியும் சோலை, தேரில் பூட்டப்படும் வலிவுள்ள குதிரைகள் இவை யாவும் அழுதன என்கிறார் கவி!


நீதிதேவன்: ஏது, இராவணனே! கம்பரின் கவிதைகளை நுட் பமாக ஆராய்ந்திருக்கிறீரே!


இராவணன்: எதிர்க்கட்சி வக்கீலாயிற்றே கம்பர்! அவருடைய வாய்மொழியிலுள்ளவை களைக் கவனித்து தானே என் குற்றமற்ற தன் மையை நிரூபிக்க வேண்டும்?


நீதிதேவன்: சரி! இராமன் வனம் புகுவது கேட்டு அயோத்தி ஒரே அழுகுரல் மயமாகி விட்டது. அதனால். ...


இராவணன்: (கைகேயியைப் பார்த்து) ஏனம்மா கைகேயி! இராமன் காடு போகிறான் என்பதைக் கேட்டு பூனையும், யானையும், குதி ரையும், குழந்தையம், பூவும், காவும், கிளியும், நாகணவாய்ப் பட்சியும் மனம் உருகி அழுதன வாமே! அந்த நேரத்திலும் தங்கள் மனம் இளக வில்லையோ?


கைகேயி: இல்லை . ..


இராவணன்: ஊரார் ஏசினர் நீதிதேவா! ஒரு மன்னரின் மனைவியைச் சொல்லத்தகாத மொழியினால் கூட ஏசினர். “கொடியவளே! கொலைகாரி!’ என்று தசரதன் ஏசினார். ஊரார் என்ன சொன்னார் களாம் தெரியுமோ? கம்பரே! கூறலாமோ?


கம்பர்: எந்தப் பாடலைச் சொல்லப் போகிறீர்?


இராவணன்: நீர் பாடியதைத்தான்! நான் என்ன களியா, சொந்தமாக பாட! ‘கணிகை காண் கைகேசி’ என்று ஊரார் பேசினராம்! கைகேயி கோபமாகப் பார்க்க) அம்மே! அரக்கனாம் என் மொழி அல்ல இது. அயோத்யா காண்டம், நகர் நீங்கு படலம்


109ஆம் பாடல். ...


கம்பர்: கணிகை காண் கைகேசி என்றால் விலைமகள் என்று பொருள். நான் அப்படிப் பாடவில்லை. கொஞ்சம் இடைச் செருகல் புகுந்து விட்டது. நான் பாடினது ‘கணிகை நாண் கைகேசி’ என்றுதான். ...


இராவணன்: பாட்டு பழுது பார்க்கப்பட்ட பிறகு, பொருள் முன்பு இருந்ததை விட மோசமாகி விட்டது கம்பரே!.. முன்பாவது கைகேயியை வேசி என்று கூறினீர்! இப்போது வேசையரும் கண்டு வெட்கப்படுவர், கைகேயியின் கெட்ட குணத்தைக் கண்டால் என்றல்லவோ பொருள்?


கம்பர்: வேறு விதமாகத்தான் இருக்க வேண்டும். நிதானமாக யோசித்தால்தான் முடியும். கைகேயியை நான கணிகை என்று கூற முடியுமா?


இராவணன்: கூறினீர்! வேறோர் சமயம் திருத் திக் கொள்ளும். சரி ஊரார் கண்டபடி ஏசினர், ஆனால் கேகயன் குமாரியின் மனம் மாறவில்லை.


நீதிதேவன்: ஆமாம்! கொஞ்சமும் இரக்க மில்லை ....


இராவணன்: அரக்கமாதல்ல, நீதிதேவா! கைகேயி அம்மை ! தசரதன் சோகமுற்று ‘மானே! மடமயிலே! கேகயன் மகளே! கேளடி என் மொழியை! பேயும் இரங்குமே பெண்கட்கரசே! நீ இரங்காயோ?” என்று எவ்வளவோ கெஞ்சினான். கைகேயி மன்னனின் புலம்பலைக் கேட்டும் மனம் இளகவில்லை . மன்னன் மூர்ச்சித்துக் கீழே விழுந் தான். அம்மையின் மனதிலே இரக்கம் எழவில்லை . கம்பர் கூறினார். மன்னர் பலர், எந்தத் தசரதனின் பாதங்களில் வீழ்ந்து வணங்கினார்களோ, அப்படிப் பட்ட மன்னர் மன்னன் கைகேயியின் காலிலே விழுந்தான். கைகேசி சூழ்வினைப் படலம் 25 ஆவது செய்யுள். தன் மணாளன், மன்னர் மன்னன் தன் காலில் விழுந்து அழுது, கெஞ்சி, ‘எனக்கு உயிர்ப்பிச்சை தர வேண்டும். என் மகன் இராமன் நாடாளாவிட்டால் போகிறது; காடு போகச் செய்யாதே! அவன் போனால் என் உயிர் நில் லாதே!’ என்று உள்ளம் உருகிக் கதறுகிறான். கேகயன் குமாரி அப்போதாவது இரக்கம் காட்டின துண்டா? இல்லை! கோசலை அழுதபோது? இல்லை! சீதை மரவுரி தரித்தபோது? இல்லை! ஊரே புரண்டு அழுதபோது? இல்லை! துளியும் இரக்கம் காட்டியதில்லை. வெற்றி பெற்றோம் என்ற களிப்புடன் அன்றிரவு துயிலில் நிம்மதியாக ஈடுபட்டார்களாம்! கம்பர் கூறியுள்ளார். உண் மைதானே கம்பரே?


கம்பர்: உண்மைதான்!


தொடரும்...

- விடுதலை நாளேடு, 17.11.18

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக