வியாழன், 22 நவம்பர், 2018

அறிஞர் அண்ணாவின் நீதிதேவன் மயக்கம் 9



இடம் : அறமன்றம்


இருப்போர்: நீதிதேவன், இராவணன், கம்பர், அக்னி தேவன்.


அக்னி: என்னை வேண்டி அழைத்தவர் களுக்குத் தரிசனம் தந்து பூஜித்தவர்களுக்கு வரம் அருளி இருக்கிறேன். இலங்கேசா! விண்ணும் மண்ணும் அறியும் என் மகிமையை - நீ அறிய மாட்டாய் - ஆணவம் உனக்கு...

இராவணன்: மகிமை...! வரம் அருளும் வல்லமை தங்கட்குக் கிடைத்தது; தங்களுக்கு இருக்கும் தேவ பதவியால்?

அக்னி: ஆமாம்.

இராவணன்: அந்தத் தேவ பதவி, மும்மலங் களை அடக்கி, பஞ்சேந்திரியங்களைக் கட்டுப் படுத்தித், தபோ பலம் பெற்று, புண்யத்தைப் பெற்றதால் தங்களுக்குக் கிடைத்தது.

அக்னி: வேறு எப்படிக் கிடைக்கும்? பஞ்சமா பாதகம் செய்து பெறுகிற பதவியா? தேவ பதவி?

இராவணன்: பஞ்சமா பாதகம், அரக்கர் செயல்! தேவர் உலகுக்கு பஞ்சமாபாதகம், நஞ்சு!

அக்னி; உண்மைதான்!

இராவணன்: அக்னி தேவனே! சப்த ரிஷிகள் உமக்குத் தெரியுமே?

அக்னி: தெரியும்.....

இராவணன்: ஏன் திகைப்பு! ஒரு முறை சப்தரிஷிகள் செய்த யாகத்திற்குச் சென்றிருந்தீரே, கவனமிருக்கிறதா?

அக்னி: போயிருந்தேன்.....

இராவணன்: தபோபலம் பெற்றவரே! தவசிகள் எழுவர் செய்த அந்த தனிச் சிறப்பான யாகத்துக்குச் சென்ற தாங்கள். ... என்ன செய்தீர்?

அக்னி: சென்றிருந்தேன் - அழைத்திருந்தனர்.

இராவணன்:  அழைக்காமலா செல்வீர்! தங்கள் மகிமையை அறிந்துதான் அழைத்தனர், அந்த மகரிஷிகள் - வரம் அருள வாரீர் என்றுதான் அழைத்தனர் - ஆனால் - அங்கு சென்று தாங்கள் செய்தது என்ன? அக்னி: ஆகுதி அளித்தனர்.... இராவணன்: அவர்கள் ஆகுதி அளித்தனர், அக்னிதேவனே! அவர்கள் அளித்தது ஆகுதி - தாங்கள் விரும்பியது என்ன?   அக்னி : நான்....

இராவணன்: தாங்கள் விரும்பியது என்ன? மும்மலங்களை  அடக்கிய மூர்த்தியே! விண்ணும் மண்ணும் போற்றும் தேவனே! அருள் வேண்டி அவர்கள் ஆகுதி அளித்தனர் - ஆனால் நீர்!... எதை விரும்பினீர்.... மனத் தூய்மையால் தேவ் பதவி பெற்றவரே! எதை விரும்பினர்... சொல்ல மாட்டீர்.. சப்தரிஷிகளின் பத்தினி மார்களை அல்லவா விரும்பினீர்....

யாகம் காணச் சென்றீர், மோகம் கொண்டு விட்டீர்!  யாகத்தில் ஈடுபட்டிருந்த சப்தரிஷிகள் மனைவிமார் மீது. . . இந்திரியங்களை அடக்கியதால் இந்தத் தேவ பதவி பெற்றீர் - உம்மை வணங்கி வரம் கேட்டனர் தவசிகள். நீரோ, காமம் கக்கும் கண்களுடன் ரிஷி பத்தினிகளைப் பார்த்தபடி நின்றீர்.

அவர்களைக் கற்பழிக்கத் திட்டமிட்டீர்... உண்டா ; இல்லையா?

அக்னி:  ஏதோ ஒரு வகையான மன மயக்கம்.

இராவணன்: உமக்கு! வரம் அருளப் போன இடத்திலே நீர் காமப் பேயானீர் - பெயரோ தேவன் - புகழோ அபாரம் - செயலோ, மிக மிக மட்ட ரகமானது... அக்னி தேவனே! யாகங்களை அழித்தனர் அரக்கர் என்கிறார்களே, அவர்கள் கூட அவ்வளவு ஈனத்தனமாக நடந்து கொண்ட தில்லை. நீதிதேவா! யாக குண்டங்களருகே இது போன்ற ஆபாசங்கள் அனந்தம் - யாகம் பகவத் ப்ரீதிக்கான காரியம் என்று வியாக்யானம் கூறுகிறார்! கம்பர்!

இந்த யாகங்களில் இலட்சணம் இப்படி இருக்கிறது! யாகங்களுக்குச் சென்று வரம் அருளப் போகும் தேவர்களின் செயல் இவ்விதம் இருக்கிறது...

அக்னி: மன மயக்கம் என்றுதான் கூறினேனே!

இராவணன்: உமக்கு மன மயக்கம் ஏற்படலாமா? யாக குண்டத்தருகே அமர்ந்திருந்த ரிஷி பத்தினிகளிடம் ஏற்பட்டதே மன மயக்கம் - கண்டித்தனரா - தண்டித்தனரா - தேவ பதவியை இழந்தீரா? - இல்லையே - காமாந்தகார சேட்டை புரிந்தீர் - புரிந்தும், அக்னி தேவனாகவே கொலு வீற்றிருக்கிறீர் - என்னையோ, இந்தக் கம்பர் அரக்கனாக்கினார் - என் ராஜ்யம் அழிந்தது தர்ம சம்மதம் என்று வாதாடுகிறார். நான் அரக்கன்! ஆனால் நான் செய்ததில்லை. தாங்கள் செய்யத் துணிந்த அக்கிரமத்தை. . .

ஆரியர்கள் செய்யும் யாகங்களைப் பற்றி, நான் எப்படி மதிப்பு கொள்ள முடியும்? இந்த யாகங்களில் பிரசன்னமாகும், அக்னி போன்ற தேவர்களிடம் நான் எப்படி மதிப்பு காட்ட முடியும்? ஆகவேதான், யாகங்களை அழித்தேன். ரிஷி பத்னிகளைக் கூடக் கற்பழிக்கத் துணியும் இந்தத் தேவர்கள், என்னை இழித்தும், பழித்தும் பேசலாமா? இவர்களின் அக்ரமத்தை அம்பலப்படுத்த யாரும் கிளம்பாத தாலேயே இவர்களுக்கும் - இவர்களின் புகழ் பாடிப் பூரிப்படையும் இந்தப் புலவருக்கும், என்னைக் கண்டிக்கத் துணிவு பிறந்தது...

.... கூப்பிடுங்கள் ஒவ்வொரு தேவனையும் - அவரவர்களின் அக்ரமச் செயலை, ஆதாரத்தோடு எடுத்துக் கூறுகிறேன் - மறுக்க முடிகிறதா இந்த மகானுபாவர்களால் என்று பார்ப்போம்.

(நீதிதேவன், கவலை கொண்டவராகி, சபையைக் கலைத்து விடுகிறார்.!

நீதிதேவன்: இன்று இவற்றுடன் நீதிமன்றம் கலைகிறது. பிறகு கூடுவோம்.

காட்சி - 9


(நீதிதேவனும், இராவணனும் வந்து கொண்டிருக்கின்றனர்)


இராவணன்: நீதிதேவா! இரக்கம் எனும் ஒரு பொருளிலா அரக்கன்; இது என் மீது சாட்டப் பட்டுள்ள குற்றச் சாட்டு. என் மீது மட்டுமல்ல, பலரால், பல பேர் மீதும் இக்குற்றச்சாட்டு, பல சமயங் களில் சமயத்திற் கேற்றாற்போல் சாட்டப்படுகிறது.

இரக்கம் இல்லையா? ஏனய்யா இவ்வளவு கல்மனம்? இரக்கம் கொள்ளாதவனும் மனிதனா? சர்வ சாதாரணமாகக் கேட்கப்படும் கேள்விகள். ஆனால், பலரால் பல சமயங்களில் இரக்கத்தைக் கொள்ள முடிவதில்லை. ஏன் வாழ்க்கையின் அமைப்பு முறைதான் காரணம்.

நீதிதேவன்: என்ன! இரக்கம் கொள்ள முடியாததற்கு வாழ்க்கையின் அமைப்பு முறையா காரணம்?

இராவணன்: ஆம் நீதிதேவா! ஆம். நீதிதேவன்: விளங்க வில்லையே. தங்களின் வாதம்.

இராவணன்: விளங்காதது, என் வாதம் மட்டு மல்ல, நீதிதேவா! என் மீது சாட்டப்பட்டுள்ள குற்றச் சாட்டும் கூடத்தான் விளங்கவில்லை. வாழ்க்கையின் அமைப்பு முறை. இரக்கத்தின் மன நிலைகளை மாற்றி விடுகிறது. இது என் வாதம். அது தங்களுக்கு விளங்கவில்லை. வாரும் என்னுடன்! என் வாதத் தின் விளக்கத்தினைக் காட்டுகிறேன். (புறப்படுதல்)

[காட்சி முடிவு


காட்சி - 10


இடம்: தேவலோகத்தில் ஒரு நந்தவனம். இருப்போர்: அகலிகை, தோழி, சீதை.


(அகலிகையும், தோழியும், பூப்பறித்துக் கொண்டே பேசுகிறார்கள்.)


அகலிகை: என்னதான் சொல்லடி, அவர் கருணாமூர்த்தி என்றால் கருணாமூர்த்திதான். என்னை என் கணவர், கல்லாகும்படி சாபம் இட்டு விட்டார் - கவனிப்பாரற்றுக் கிடந்தேனல்லவா - வெகு காலம் எவ்வளவோ உத்தமர்கள், தபோத னர்கள் அவ்வழிப் போய்க் கொண்டும், வந்து கொண்டுந்தான் இருந்தனர் - ஒருவர் மனதிலும் துளி இரக்கமும் உண்டாகவில்லை.

தோழி: கல் மனம் படைத்தவர்கள்.

அகலிகை: கனி வகைகளைக் கொடுத்திருப் பேன். அவர்களில் எவ்வளவோ பேருக்கு. காலைக் கழுவி, மலர்தூவி இருப்பேன் - ஒருவருக்கும் இரக்கம் எழவில்லை. கடைசியில் என் அய்யன் கோதண்டபாணி, மனதிலே இரக்கம் கொண்டு என்னைப் பழையபடி பெண் உருவாக்கினார் - என் கணவரையும் சமாதானப் படுத்தினார் - அவரு டைய இரக்கத்தால்தான் எனக்கு விமோசனம் கிடைத்தது.

(அகலிகை பேசுவதைக் கேட்டுக் கொண்டே வந்த சீதை)


சீதை: எவருடைய இரக்கத்தால்? (அகலிகை ஓடிவந்து சீதையின் பாதத்தில் மலர் தூவி, நமஸ்கரித்த பிறகு தோழியும் நமஸ்கரிக்கிறாள்.)

அகலிகை: அன்னையே! நமஸ்கரிக்கிறேன். தங்கள் நாதன், ஸ்ரீராமச்சந்திரருடைய கலியாண குணத்தைத்தான் கூறிக் கொண்டிருந்தேன். அவருடைய கருணையால்தான் இந்தப் பாவிக்கு, நற்கதி கிடைத்தது.

சீதை: அவரைத்தான் இரக்க மனமுள்ளவர் என்று புகழ்கிறாயா?

தொடரும்

- விடுதலை நாளேடு, 21.11.18

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக