புதன், 21 நவம்பர், 2018

அறிஞர் அண்ணாவின் நீதிதேவன் மயக்கம் 7



ஏடா! மூடா! விறைத்துப் பார்க்கிறாய் பதிலேதும் கூறாமல் உனக்கு மகன் இல்லையா - தவம் செய்து தலையைப் பறிகொடுத்த தனயனின், தாய் நான்! இந்த அநீதி, நடந்திருக்கிறது, அடவியில் அல்ல, அயோத்தியில்! களத்திலே அல்ல, தவத் தலத்திலேயே நடந்திருக்கிறது.

மகனே! கடவுளை உள்ளன்போடு எண்ணும்போது, கசிந்து கண்ணீர் மல்கும் என்று சொல்வாயே! இது, என்னடா மகனே! எனதருமை மகனே! - இரத்தமடா, இரத்தம், பெற்ற மனம் சும்மா இருக்குமடா, மகனே! எந்தப் பேயன் செய்தான் இந்தக் காரியம் -

அவனைக் காட்டுங்கள். சிரம் இருபது இருப்பினும், என் இருகரம் போதும், இரக்கமற்ற பேயன் யார்?

யார்? அவன் யார்? எங்கே? எங்கே இருக்கிறான்?

சீக்கிரம் அழைத்துச் செல்லுங்கள் - இன்னும் சில விநாடியே என் உயிர் இருக்கும் - அதற்குள் நான் அவனைக் காண வேண்டும் - அவன் என் கண்ணீரைக் காண வேண்டும்.

இதோ - இரத்தம் - மகனுடைய இரத்தம், தாயின் கரத்தில் -

ஈவு இரக்கமற்ற இந்தக் கொலைகாரனைக் காட்டுங்கள், அவன் உடலிலே, இந்த இரத்தத்தைப் பூசுகிறேன் - அதுபோதும், அவன் உயிர் போக -

(இராமன் அவ்வழி வர)

யார்? இராமனா! இராமன் அறிவானா, இதனை - இராமா! உன் ஆட்சியிலே, மகனின் வெட்டுண்ட தலை, தாயின் கையிலே! தவசியின் தலை! - சிலையா, நீ - சீற்றம் பிறக்கவில்லையா? - கண் திறந்துதானே இருக்கிறது - இதோ, என் மகன் தலை - மாபாவி யாரோ, கொன்றுவிட்டான் - பிடி - நீட்டு கரத்தை - என் உயிர் பிரியும் நேரம் இது - நீ தர்ம தேவன் - ராஜாராமன் - தவசிகளை ரட்சித்தவன் - தவசிகளை  இம்சித்த ராட்சதர்களைச் சம்ஹரித்த ஜெயராமன்! - இந்த அக்ரமத்துக்குத் தக்க தண்டனை தர, உன்னால் முடியும்! உன் கடமை அது! மகனை, மாபாவி கொன்று விட்டான் - மாதா வயிறெரிந்து கூறுகிறேன், பழிவாங்கும் பொறுப்பை உன்னிடம் ஒப்படைக்கிறேன். - ராமா! நீ நல்லவன். சகலகலா வல்லவன். என் மகனைக் கொன்ற மாபாவியை, மண்டலத்திலே, எங்கு இருப்பினும், தேடிக் கண்டுபிடித்து, அவனுடைய ஈவு இரக்கமற்ற நெஞ்சைக் கூறு கூறாக்கிக் காக்கை கழுகுக்கு விருந்திடு. வேண்டாம்! அவைகளின் குணமும் மேலும் கெட்டு விடும் - மண்ணில் புதைத்து விடு. இராமா! என் கண்ணீர் என் மகனின் வெட்டுண்ட கழுத்திலிருந்து ஒழுகும் இரத்தம், இரண்டும், இதோ, உன் கரத்திலே, கலந்து குழைந்து இருக்கிறது! பழிக்குப் பழி! அக்கிரமக்காரனுக்குத் தக்க தண்டனை! இரக்க மற்றவனுக்கு ஏற்ற தண்டனை அளிக்க வேண்டிய பொறுப்பு உன்னுடையது - என் மகன் தலை - உன் கையில் - நான், உன் காலடியில் -

(அவள் கீழே உயிரற்று வீழ்கிறாள். இதற்குள் பணியாட் கள் வந்து கூடுகின்றனர். கறைபட்ட இராமனின் கரத்தைக் கழுவ நீர் கொண்டு வந்து தருகின்றனர். கை கழுவிக் கொண்டே!)

இராமன்: இன்னும் கொஞ்சம் ஜலம், கழுவக் கழுவ... கறை போக காணோம்.

பட்டுத்துணி கொண்டு துடைத்தும் பயனில்லை. எடுத்துச் செல்லுங்கள்.

(தலையையும் தாயின் உடலையும் எடுத்துச் செல் கின்றனர். இராமன் அரண்மனை செல்கிறான்.)

காட்சி - 6


இடம்: தேவலோகம் அறமன்றம்


இருப்போர்: நீதிதேவன் இராவணன், கம்பன், அறநெறி கூறுவோர்.


(இராவணன் கெம்பீரமாக உலவிக் கொண்டு பேசுகிறான். நீதி தேவனின் முகத்திலே பயமும் சோகமும் நன்றாகப் படிந்திருந்தது. கம்பர் அறநெறி கூறுவோரைப் பார்த்துப் புன்னகை புரிகிறார். அவர்களின் முகத்தி லேயும் கவலைக் குறிகள் காணப்படுகின்றன..

இராவணன்: தேவா! பேசிய சாட்சிகள் - இங்கு வந்து பேசாத சாட்சிகளை விடக் குறைந்த அளவுதான் எண்ணிக்கையில். நான் மேலும் சாட்சிகளை அழைக்கப் போவதில்லை,

கம்பர்: (எழுந்து நின்று நீதிதேவனுக்கு மரியாதை தெரிவித்து விட்டு) உண்மைக்குச் சாட்சி தேவையில்லை - வைரத்துக்கு பளபளப்புத் தர வேண்டியதில்லை - அமிர்தத்துக்கு இனிப்புக் கூட்டத் தேவையில்லை - அழகுக்கு அலங்காரம் தேவை யில்லை -

இராவணன்: (கேலியாக) பாம்பின் பல்லுக்கு விஷம் தேவையில்லை - ஏராளம் அதனிடமே.

நீதிதேவன்: கம்பரே! உவமைப் பூங்காவில் உலாவ நேரம் இல்லை. என்ன உரைக்க எண்ணுகிறீர்?

கம்பர்: நான் என் வாதத்துக்குத் துணை தேட, சாட்சிகளை அழைக்கப் போவதில்லை, உண் மையின் உருவத்தைத் தெளிவுப்படுத்த, நீதிதேவ னின் திருச்சபையிலே அவசியமில்லை - தங்கள் திருப்பார்வைக்கு, உண்மை ஏற்கெனவே நன்கு தெரிந்தே இருக்குமாகையால்.

நீதிதேவன்: அதாவது சாட்சி இல்லை. கம்பர்: அவசியமில்லை . ..

நீதிதேவன்: அது நான் கவனித்துக் கொள்ள வேண்டிய விஷயம் - அவசியமா, அல்லவா என் பது - சாட்சி இல்லை என்று மட்டும் நீர் கூறலாம்.

கம்பர்: ஆமாம் நீதிதேவா! சாட்சி இல்லை - அதாவது .......

நீதிதேவன்: இலங்கேசன், பேசலாம்.

இராவணன்: வழக்கின் முடிவு பற்றிய கவலையற்றே நான் இதிலே கலந்து கொள்கிறேன் என்பதை முதலிலேயே கூறிவிட் டேன். காரணம் நீதிதேவனிடம் மதிப்புக் குறைவு அல்ல. நீதிதேவனும் ஏற்கெனவே தயாரிக்கப்பட்ட, ஏதோ ஒர் கட்டுத் திட்டத்துக்கு உட்பட்டே, வேலை செய்பவர். அவரிடம் உள்ள துலாக்கோல் அவர் செய்தது அல்ல! படிக்கற்கள் அவருக்குத் தரப்பட்டவை! இவைகளின் துணை கொண்டு நீதிதேவன், நிறை பார்க்கிறார், நான், அவருடைய நிறை பார்க்கும் குணத்தைச் சந்தேகிக்கவில்லை. அந்தத் துலாக் கோலையே சந்தேகிக் கிறேன். படிக்கற்களையே சந்தேகிக்கிறேன். எனக்குச் சாதக மான, தீர்ப்பு கிடைக்க வேண்டுமானால், நீதி தேவனின் உள்ளம் திருப்தியாவது மட்டும் போதாது - அவர் தம்மிடம் தரப்பட்டுள்ள துலாக் கோலையும், படிக்கற்களையும், தூக்கி எறிந்து விட்டு வழக்கின் சகல அம்சங்களையும் தாமாகச் சீர் தூக்கிப் பார்க்க வேண்டும். இதற்கு நீதி தேவனுக்கு நல்லெண்ணம் இருந்தால் மட்டும் போதாது - உள்ளத்தில் உரம் வேண்டும்.

(நீதிதேவன், தலையைத் தொங்க விட்டுக் கொண்டி ருக்கக் கண்டு கம்பர் கோபமாக எழுந்து) கம்பர்: இலங்காதிபதி, வழக்கு மன்றத்தையே அவமதிக்கிறான் - அவமதிக்கிறார் -

இராவணன்: (கம்பரை நோக்கிக் கேலியாக) நான் கவியல்ல, குழைய, நெளிய! நான் இப்போது எடுத்துரைத்தது வாய்மை - என் அகராதிப்படி.

நீதிதேவன்: (தலையை நிமிர்த்தி இலங்கேச னைக் கெம்பீரமாகப் பார்த்து) இலங்காதிபனே! ஆளுக் கேற்றபடி, வேளைக்கேற்றபடி, வழக்குக் கேற்றபடி, துலாக்கோலையும், படிக்கற்களையும் மாற்றுவதும், புதுப்பிப்பதும் என்ற நிலை பிறந்தால், என்ன கதியாகும் நீதி?

இராவணன்: அதற்கு அஞ்சி, காலச் சுமை வீழ்ந்து, வீழ்ந்து சாய்ந்து போன துலாக் கோலில், தேய்ந்து போன படிக்கற்களைப் போட்டு, நிறை பார்ப்பது நீதியாகுமா, தேவா!

நீதிதேவன்: (சற்று கோபத்துடன்) சாய்ந்த தராசு! தேய்ந்த படிக்கற்கள்! முதன் முறையாக இம்மன்றத் தின் முன் கூறப்பட்ட குற்றச்சாட்டுகள்,

இராவணன்: இதுதானே நீதிதேவா, முதல் புனர் விசாரணை! நான் பேசினேன் முதலில், பிறர் பிறகு பேசுவர். முடிவு என்ன? கவலை இல்லை! மறு விசாரணை வந்ததே அது போதும் தேவனே! மாசு நீதிமன்றத்துக்கும் உண்டு, அளிக்கப்பட்ட தீர்ப்பு களெல்லாம் மாற்ற முடியாதன அல்ல என்ற பல புது உண்மைகள் ஏற்பட்டு விட்டன அல்லவா, அது போதும், என் களிப்புக்குக் காரணம் அதுதான்.

(நீதிதேவன் எழுந்து கோபமாக) நீதிதேவன்: பிறகு கூடுவோம்.

காட்சி முடிவு

காட்சி -7


இடம்: வால்மீகி ஆசிரமம்


இருப்போர்: துரோணர், வால்மீகி


நிலைமை: வால்மீகி அமர்ந்து ஓலைச் சுவடி களைப் படித்துக் கொண்டிருக்கிறார். துரோணர் அப்போது அங்கு வருகிறார். துரோணர்: நமோ நமக! நமோ நமக!

வால்மீகி: நமோ நமக! நமோநமக! வாருங்கள்!  துரோணாச்சாரியார் அவர்களே! வாருங்கள், சகல கலா வல்லவராகியத் தாங்கள், இந்த ஆஸ்ரமத்துக்கு விஜயம் செய்ததால், நான் பாக்கியவானானேன்.

துரோணர்: நீங்கள் பாக்கியசாலிதான். ஆனால். . . வால்மீகி: என்ன முனிவரே! விசாரம்!

தொடரும்

- விடுதலை நாளேடு, 19.11.18

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக