இராவணன்: பக்தி தலைக்கேறி விட்டதே! பாபம்! வெட்டுண்ட தலைகளைக் கண்டார் - இரக்கம் எழவில்லை - இன்னும் வெட்டப்பட வேண்டிய தலை உண்டா என்று தேடினார் இந்த மகானுபாவர். கம்பரே! இவர் அரக்கரல்ல, அரன் அடியார்! ஒரே ஒரு குழந்தையைக் கண்டார். பரசுராமர்: ஓஹோ அந்தக் குழந்தையின் முகத் தைக் கண்டு இரக்கம் பிறந்ததோ - (விசுவாமித்திரரைப் பார்க்கிறார்.) இராவணன்: இல்லை கோபம் வந்தது, அந்தச் சிசுவையும் இந்தச் சிவபக்தர் கொல்லக் கிளம்பினார். விசுவாமித்திரர்: குழந்தையைக் கொல்ல இராவணன்: அய்யா! வேண்டாம். மற்றவர்கள் சிவசொத்தைத் தின்றார்கள் என்று கொன்று விட்டீர்.
இச்சிசு அக்குற்றமும் செய்யவில்லையே. கொஞ்சம் இரக்கம் காட்டும், இக் குழந்தையைக் கொல்லாதீர், என்று வேண்டிக் கொண்டனர். விசுவாமித்திரர்: வேண்டிக் கொள்ள... இராவணன் : சிவபக்தர், சீற்றம் தணியாதவராய் இச்சிசு, அதன் தாய்ப்பாலைக் குடித்திருக்குமன்றோ - அந்தப் பாலிலே சிவசொத்து கலந்திருந்ததன்றோ - ஆகவே சிசுவும் கொல்லப்படத்தான் வேண்டு மென்று கூறி, சிசுவைத் தூக்கி மேலுக்கு எறிந்து, கீழே விழும்போது, இடையில் வாளை ஏவி, குழந்தையை இரண்டு துண்டு ஆக்கினார், இரக்கமற்று .
இறைவனின் நற்தொண்டன் என்று தன்னைக் கூறிக் கொண்டு, இரக்கமற்ற இவர் அரக்கரல்ல - கம்பரே! நான் அரக்கன். கேட்டால் என்ன சொல்லுவார்? பக்தி அதனால் செய்தேன் என்பார். பக்தியின் பேரால் படுகொலை செய்தேன் என்பார். பக்தியின் பேரால் படுகொலை செய்தார் - காரணம் எதுவோ கிடக்கட்டும் - நடந்தது படுகொலை - இரக்கம் இருந்ததா? துளி! பெண்கள் அழுதபோது? பால் வடியும் முகமுடைய சிசு கதறியபோது? - இருந்ததா - இரக்கம் காட்டப் பட்டதா கோட்புலியாரே, இரக்கம் காட்டினீரா? இரக்கமற்றுப் படுகொலை செய்தவர் நாயனார் - அடியார் - கொலைக் கஞ்சாக் கோட்புலி! கட்டை விரலை காணிக்கையாகப் பெற்ற துரோணர் - தாயின் தலையை வெட்டிய தரும சொரூபி பரசு ராமன் - பெற்றெடுத்த குழந்தையையும் பிரியத்தை அர்ப்பணித்த காதலியையும் இரக்கமின்றி கைவிடத் துணிந்த விசுவாமித்திரன் - இவர் களெல்லாம் தவசிகள் - ரிஷிசிரேஷ்டர்கள் - பரமன் அருளைப் பெற்றவர்கள் - நீதிதேவா! நான் அரக்கன் - இவர்கள் யார்? - என்னை விசாரிக்கக் கூடிடும் அறமன்றத்திலே இவர்கள் காப்பாளர் களாம். இரக்கமற்ற இவர்கள் இருக்க வேண்டிய இடம் இதுவா?
குற்றக் கூண்டில் இருக்க வேண்டி யவர்கள்! நீதிதேவா! அறம் - அன்பு - ஏதுமறியாத இவர்கள், அறநெறி காப்பாளர்களா? (கோபத்துடன், கூண்டை விட்டு இறங்கிச் சென்று) (அறநெறி காப்பாளர்கள் இருக்கும் இடத்துக்குச் சென்று) இரக்கமற்ற இவர்கள் இருக்க வேண்டிய இடம் இதுவா? (ஆசனத்தைப் பிடித்தாட்ட அவர்கள் அலறுகிறார்கள்) (நீதிதேவன் மீண்டும் மயக்க மடைகிறார். கம்பர் பயந்து, நடுங்கி, அவசர அவசர மாக வெளியே செல்லப் பார்த்துக் கால் இடறிக் கீழே வீழ்கிறார். இராவணன் சென்று அவரைத் தாங்கிப் பிடித்துக் கொண்டு, வெளியே அழைத்துச் செல்கிறான்.)
திராவிட நாடு 8-3-1947)
(முற்றும்)
- விடுதலை நாளேடு, 26.11.18
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக