புதன், 14 நவம்பர், 2018

அறிஞர் அண்ணாவின் நீதிதேவன் மயக்கம் 2



காட்சி - 4 (பூலோகத்திலே புதுக்கருத்துக்கள் பரவிவிட் டனவாம்! பழைய நிகழ்ச்சிகளுக்கு நாம் கூறின முடிவுகள், தீர்ப்புகள் தவறு என்று புகார் கிளம்பி விட்டது. ஆகவே, இனிப் பழைய தீர்ப்புகள் செல்லுபடியாகா என்று கூறிவிடுவார்கள் போலி ருக்கிறது. இதை உத்தேசித்து, புனர் விசாரணைக் கோர்ட் நியமித்திருக் கிறேன் என்று ஆண்டவன் அறிவித்தார். நீதிதேவன் வழக்கு மன்றத் தைக் கூட்டினார். முதல் புனர் விசாரணையாக, இராவணன் வழக்கு எடுத்துக் கொள்ளப்படுகிறது. கம்பர், பழைய கோர்ட் தீர்ப்பின் படி இராவணன் குற்றவாளிதான். இலங்கை அழிந்தது நியாயமே. இராவணன் இரக்கமற்ற அரக்கன் என்று நீதிதேவனிடம் சமர்ப்பிக்கிறார். இராவணன் தன் வழக்கைத் தானே நடத்த இசைகிறான், கோர்ட் டிலே, நீதிதேவன் தலைமை தாங்குகிறார். கம்பர், ஓலைச் சுவடிகளுடன் தயாராக இருக்கிறார். சாட்சிகளாகச் சூர்ப்பனகையும், கைகேயியும் ஆஜராகியுள்ளனர். இராவணன், எப்போதும் போலவே கெம்பீரமாக வருகிறான். வழக்கு ஆரம்பமாகிறது.) நீதி: இலங்காதிபனே! உன் கட்சியை எடுத்துக் கூற யாரை நியமித்திருக்கிறீர்?

இரா: என்னையே நம்பி ஏற்றேன் இப்பணியையும்! கம்பரே! உமது கவிதையிலே கொஞ்சம் எடுத்துக் கொள்ள அனுமதியுங்கள்.

(கம்பர் புன்னகை புரிகிறார்.) நீதி: உமது கட்சியை நீரே எடுத்துப் பேசப் போகிறீரா?

இரா: ஆமாம். . . நான் போதும் அதற்கு என்று நம்புகிறேன்.

நீதி: வணங்கா முடியான் என்றோர் பெயர் உமக்குண்டா?

கம்: பெயர் என்று கூறுவதை விட, வசைமொழி என்பது பொருந்தும்.

இரா: பொருத்தம் பார்ப்பதானால், வணங்கா முடியான் என்று ஓர் பழிச்சொல் உண்டு என்று கூறலாம்.

நீதி: சொல் விளக்கத்துக்குள் நுழைய வேண்டாம். அவ்விதம் அழைக்கப்பட்டதுண்டா?

இரா: ஆமாம். ...

நீதி: ஏன்? இரா: நான் கேட்க வேண்டிய கேள்வி அல்லவா அது!

கம்: எவருக்கும் வணங்கினதில்லை; மதிப்ப தில்லை. அவ்வளவு மண்டைக் கர்வம். . . என்று பொருள்படும்.

இரா: பொருள்படும் என்று இழுப்பானேன் கம்பரே! நீரேதான் சொல்லிவிடுமே, எனக்கு மண்டைக் கர்வம் என்று!

நீதி: எவரையும் வணங்காத காரணம்? இரா: அவசியம் ஏற்படாததனால் நீதி: தக்க சமாதானமா இது!

இரா: நான் மட்டுமா? எத்தனையோ மண்டலாதிபதிகள் வெற்றி வீரர்களாக இருக்கும் வரையிலே, வணங்காமுடி மன்னர்களாகத்தான் இருந்தனர்.

கம்: அவர்கள் கூட, தமது இன்பவல்லிகளின் தாளிலே வீழ்ந்ததுண்டு. மஞ்சத்திலே. . .

இரா: நமது கம்பருக்கு அந்த ரசவர்ணனையிலே அபாரத் திறமை!

நீதி: மாலை நேரப் பேச்சு, காலை வேலைக்கு உதவாது.

இரா: பூலோகத்திலே எத்தனையோ மன்னாதி மன்னர்கள், வீராதி வீரர்கள் மற்றொருவருக்கு வணங்காமல் வாழ்ந்தனர். அதுபோலத்தான் நானும் வணங்கா முடியனாக வாழ்ந்து வந்தேன். அது என் வீரத்தின் இலட்சணம். வீணர்கள் அதையே என்னைப் பழிக்கவும் பயன்படுத்திக் கொண்டனர்.

கம்: அந்த வாசகத்தைப் பற்றிய விவாதத்தை விட்டு விடலாம் என்று எண்ணுகிறேன். ஏனெனில் வணங்கா முடியன் என்ற பெயர் துரியோதன னுக்கும் உண்டு. ஆகவே, இந்தச் சில்லறைக்குச் சிந்தனையைச் செலவிட வேண்டாம். முக்கியமான விஷயத்தைக் கவனிப்போம். அய்ம்புலன்களை அடக்கி, ஒடுக்கி, பரமனை வேண்டித் தவம் செய்து வந்த முனிபுங்கவர்களின் யாகயோகாதி காரியங் களை இலங்காதிபன் கெடுத்து நாசமாக்கி வந்தான். இப்பெருங் குற்றத்துக்கு என்ன பதில் கூறுவான்?

இரா: தவம், ஆரிய முறை. அதை என் இனக் கலாச்சார முறைப்படி நான் ஆதரிக்க முடியாது. யாகம் என்பது ஜீவன்களை வதைத்து, பொரு ளைப் பாழாக்கி, மக்களை ஏய்க்கும் ஆரிய தந்திரம் என்பது, என் இனத்தின் சித்தாந்தம். ஆகவே, என் ஆட்சிக்குட்பட்ட இடங்களிலே, ஆரியன் பிரவே சித்து, என் கலாச்சாரத்துக்கு விரோதமான காரியத் தைச் செய்து, அதன் மூலம் என் கட்டளையை மீறினதால் நான் யாகங்களை அழித்தேன்.

கம்: அதைத்தான் குற்றமென்று கூறுகிறோம்.

இரா: அது எப்படி குற்றமாகும்? என் ஆட்சிக்குட்பட்ட இடத்திலே, என் மக்களுக்கு எது சரி என்று தீர்மானிக்கவும், அதற்கு மாறாக நடப் பவர்களைத் தண்டிக்கவும் எனக்கு அரச உரிமை உண்டு. அயோத்தியிலே தசரதன் செய்த அஸ்வ மேத யாகத்தையா அழித்தேன்? என் ஆளு கையில் இருந்த தண்டகாரண்யத்திலே, தவசி வேடத்தில் புகுந்து, என் தடை உத்தரவை மீறின வர்களை, யாக காரியங்கள் செய்யலாகாது என்று தடுத்தேன். மீறிச் செய்தனர். அழித்தேன். உங்கள் இராமன், அதே தவத்தை ஒரு சூத்திரன் செய் ததற்காக அவனுடைய இராஜ்ஜியத்தில், அவன் அனுஷ்டித்த ஆர்ய தர்மப்படி தவம் செய்தது குலமுறைக்குத் தகாது என்று கூறிக் கொல்ல வில்லையா? ஆரிய ராமன், ஆரிய பூமியில் ஆரிய தர்மத்தைக் காப்பாற்ற அநாரியத் தவசி யைக் கொன்றான்! அவன் அது என் உரிமை என்றான். என் நாட்டிலே என் உரிமையை நான் நிறைவேற்றுவது தவறாகுமா?

கம்: அதுகூடக் கிடக்கட்டும்... நீ இரக்கமெனும் ஒரு பொருளிலா அரக்கன். ஆகவேதான் உன்னை இராமர் கொன்று இலங்கையை அழித்தார். இரக்கம், உயர்ந்த பண்பு, அதை இழந்தவர்களைத் தண்டிப்பது, தேவப் பிரீதியான காரியம். நியாயம்; தர்மம்.

நீதி: (கம்பரைப் பார்த்து) இரக்கமின்றி இரா வணன் நடந்து கொண்டவைகளை விவரமாகக் கூறும்.

கம்: ஆகா! தடையின்றி. ... இராவணன் மகா பண்டிதன்; வல்லமை மிக்கவன், தவசியும் கூட. சாமவேதம் பாடியவன். சவுந்தர்யத்தில் நிகரற் றவன், எல்லாம் இருந்தது அவனிடத்தில். ஆனால் இரக்கம் என்ற ஒரு பொருள்தான் இல்லை. இரக்கமின்றி இராவணன் செய்த பல கொடுஞ் செயல்களை நான் விவரமாகக் கூறுகிறேன். கேளுங்கள். . .

இரா: கம்பரே! சிரமம் ஏன் தங்களுக்கு? இரக்கம் என்ற ஒரு பொருள் இல்லாத அரக்கன் என்பது தங்கள் குற்றச்சாட்டு. அதற்கு ஆதாரம் கூறி ஏன் அலுத்துப் போக வேண்டும்? நானே கூறுகிறேன். கேளும்... பூங்கொடி துவள்வது போலானாள், அந்தப் பொன் அவிர் மேனியாள் சீதாவை நான் சிறை யெடுத்தபோது நான் இரக்கம் காட்டவில்லை.

அலறினாள்-நான் அரக்கன் என்று அறிந்ததும்! நான் இரக்கங்காட்டவில்லை. சபித்து விடுவேன் என்றாள்; புன்னகை புரிந்தேன். அழுதாள், சிரித் தேன். பிராணபதே என்று கூவினாள்; எதற்கும் நான் இரக்கங் காட்டவில்லை .

அடே, துஷ்டா! அரிபரந்தாமனின் அவ தாரமடா இராமன். அவனுடைய தர்ம பத்தினி யையா இந்தக் கோலம் செய்கிறாய்? என்று வயோதிக சடாயு வாய் விட்டு அலறினான் - சீதை உயிர் சோர, உடல் சோர, விழியில் நீர் வழியா, கூந்தல் சரிய ஆடை நெகிழ, அலங்கோலமாக இருக்கக் கண்டு! போடா போ என்றேன். போரிடத் துணிந்தான். போக்கினேன் அந்தப் புள்ளின் உயிரை! இரக்கம் காட்டினேனா? இல்லை. . .

அரசிளங்குமரி சீதையை அசோக வனத்திலே சிறை வைத்தேன். இராஜபோகத்தில் இருக்க வேண்டிய அந்த ரமணியைக் காவலில் வைத்தேன். சேடியர் புடைசூழ நந்தவனத்திலே ஆடிப்பாடி இருக்க வேண்டிய அழகியை, அரக்க மாதர் உருட்டி மிரட்ட, அவள் அஞ்சும் படியான நிலையிலே வைத்தேன். அந்த அழகியின் கண்கள் குள மாயின. நான் இரக்கம் காட்டினேனா? இல்லை... இரக்கம் காட்டவில்லை. தேகம் துரும்பாக இளைத்து விடுகிறது, தேவகாலனே! என்று என் னிடம் கூறினர்; கோதாக்கூந்தல் - பேசா வாய் - வற்றாத ஊற்றெனக் கண்கள்! வைதேகி, விசாரமே உருவெடுத்தது போலிருக்கிறாள் என்று சொன் னார்கள்.

 

பழம், பால், மது, மாமிசம், மலர் - எதனையும் ஏற்றுக் கொள்ள மறுத்துவிட்டாள் ஜானகி என்று தெரிவித்தார்கள். சரி, புத்தி கூறு; மிரட்டு; கொன்று போடுவேன் என்று சொல் பிடிவாதம் கூடாது என்று தெரிவி; தேவர்க்கும் மூவர்க்கும் அஞ்சாத இலங்காதிபதி, ஒரு தையலின் கண்ணீருக்கு அஞ்ச மாட்டான் என்று சொல் என்றுதான் என்னிடம் சேதி சொன்னவர்களுக்குச் சொல்லி அனுப் பினேன். இரக்கம் காட்டவில்லை?

தொடரும்

- " விடுதலை நாளேடு, 14.11.28

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக