சனி, 24 நவம்பர், 2018

அறிஞர் அண்ணாவின் நீதிதேவன் மயக்கம் 11



நீதிதேவன் : குற்றவாளியெனக் கருதப்படுபவன் மிகச் சாதாரணமானவன் என்று தாங்கள் கூறிட முடியாது. கம்பரே, அவன் தனக்கு ஆதாரமாக எடுத்துக் காட்டும் சம்பவங்களையும் சாதாரண மானதென்றும் தள்ளிவிட முடியாது. தன் இசை வன்மையால் பரமனின் உள்ளத்தையே உருக வைத்தவன். ஈடு இணையற்ற கலைஞன். இவை களை இல்லை என்று மறுத்திட எவர் உளர் கம்பரே! அவனுடன் நான் செல்வது, அடாது, கூடாது, என்று கூறுவோர், என்ன காரணம் கூறுவர்.

கம்பர்: மற்றவர்கள் என்ன கூறுகிறார்கள் என்பது பற்றி நான் ஏதும் அறியேன். நான் கூறுவது, குற்றவாளியெனக் கருதப்படுபவனுடன், தீர்ப்பு கூறுவோர் சுற்றிக் கொண்டிருப்பது, முறையல்ல, சரியல்ல என்று. அவன் விளக்கம் கூற தங்களை அழைக்கிறான் என்றால், என்னையுமல்லவா, உடன் அழைத்துச் செல்ல வேண்டும்? தாங்கள் மட்டும் தனியாகச் செல்வது தவறல்லவோ?

நீதிதேவன்: குற்றம் சாட்டப்பட்டவனை, தனியாக விசாரிப்பதும், குற்றம் சாட்டியவர்களை தனியாக விசாரிப்பதும் பிறகு இருவரையும் வைத்து விசாரணை நடத்துவதும், தீர்ப்புக் கூறு வோனின் முறை அல்லவோ? அது எப்படித் தவறாகும்? கம்பர்: கடல் சூழ் உலகமெலாம், கவிச் சக்கரவர்த்தி எனப்போற்றப்படும் என்னையும், கருணையும், இரக்கமும் இல்லாத அரக்கனையும், ஒன்றாகவே கருதிவிடுகிறீரா, தேவா? ஏற்கெனவே அளிக்கப்பட்ட தீர்ப்பின் மீது, மறு விசாரணை கொள்வதே ஏற்றமுடையதாகாது. அப்படி எடுத்துக் கொண்ட மறுவிசாரணையில் குற்றவாளி யின் பின்னால், தீர்ப்புக் கூறுவோர் சுற்றிக் கொண்டிருப்பது கற்றறிவாளர், ஏற்றுக் கொள்ள முடியாதது, தேவா! நீதிதேவன் : முற்றும் கற்றுணர்ந்தோர் முடிவு கூட கால வெள்ளத்தால், சரியானவை அல்ல என்று மறுதீர்ப்பளிக்கப்பட்டுள்ளன என்பதும் தாங்கள் அறியாததல்ல. கம்பர்: நீதிதேவா! தங்களை நிந்திக்க வேண்டு மென்பதோ, தங்கள் மீது மாசு கற்பிக்க வேண்டு மென்பதோ, எனது எண்ணமல்ல. எல்லாவித ஆற்றலும், அறிவும், திறனும் இருந்தது. ஆனால் அன்னை சீதா பிராட்டியாரை, அவன் சிறை வைத்ததும், கொடுமைப்படுத்தியதும், அவனது இரக்கம் இல்லாத அரக்க குணத்தால்தான் என்று நான் எடுத்துரைத்த தீர்ப்புக்கு தங்கள் தீர்ப்பு மாறுபடுமானால், கவிச்சக்கரவர்த்தி கம்பர் மட்டுமல்ல, தேவரும், மூவரும், முனிவரும் பரிகசிக்கப்படுவர். எனவே தங்களைக் கேட்டுக் கொள்வதெல்லாம், இரக்கமில்லா கொடுமனம் படைத்தவன் தான் இராவணன், அரக்க குணம் படைத்தவன்தான் என்பதில் எள்ளளவும் சந்தேக மில்லை, என்ற தீர்ப்பையே நான் எதிர்பார்க் கிறேன். சென்று வருகிறேன். தேவா.

(கம்பர் போய் விடுகிறார்.)

பணியாள்: என்ன தேவா! இராவணனுடன் செல்வது, தகாது, கூடாது, என்று கூறி விட்டு, கம்பர் தானே தீர்ப்பைக் கூறி, அதன்படி தீர்ப்பும் இருக்க வேண்டுமென்கிறாரே! இது என்ன வகையில் நியாயம் தேவா! நீதிதேவன்: இதுதான் நேரத்துக்கேற்ற, ஆளுக் கேற்ற நியாயம். இலங்காதிபதி, தீர்ப்பைப் பற்றிக் கவலைப் படவில்லை. கம்பர் தன் தீர்ப்பு குற்றமுடையது என்று கூறிவிடப் போகிறார்கள் என்று கவலைப்படுகிறார். உம் பார்ப்போம்.

(காட்சி முடிவு)


காட்சி - 13 இடம் : அற மன்றம் இருப்போர்: நீதி தேவன், இராவணன், கம்பர், விசுவாமித்திரர்.


நிலைமை : இராவணன் வாதாடுகிறான். கம்பர், அலட்சியமாக இருப்பது போல் பாவனை செய்கிறார். விசுவாமித்திரர் திகைப்புற்றுக் காணப்படுகிறார். இந்த வழக்கை விசாரிக்க வேண்டிய தொல்லை நமக்கு வந்து சேர்ந்ததே என்று நீதிதேவன் கவலைப்படுகிறார்.

இராவணன்: (விசுவாமித்திரரைப் பார்த்து) நாடாண்ட மன்னனைக் காடு ஏகச் செய்தீர்! அரண்மனையிலே சேடியர் ஆயிரவர் பணிவிடை செய்ய, ஆனந்தமாக வாழ்ந்து கொண்டிருந்த அரசியை அடிமை வேலை செய்ய வைத்தீர். மகன் பாம்பு தீண்டி இறந்தான். சுடலை காத்து நின்றான் கணவன்! செங்கோல் ஏந்திய அவன் கரத்திலே, தவசியாரே! பிணங்கள் சரியாக வெந்து, கருகினவா என்று கிளறிப்பார்க்கும் கோல் இருந்தது.

பெற்ற மகன் பிணமாக எதிரே!

பொற்கொடி போன்ற மனைவி கதறிப் புரண்டிடும் காட்சி, கண் முன்னே.

பிணம் சுட, சுடலைக் காசு கேட்கிறான்!

தன் மகன் பிணமாக, தன் மனைவி மாரடித்து அழுகிறாள் - மாதவம் புரிந்தவரே! மகரிஷியே! அந்த மன்னன், சுடலைப் பணம் எங்கே என்று கேட்கிறான். அய்யோ மகனே! பாம்பு அண்டிக் கடித்தபோது அலறித் துடித்திட்டாயோ, பதறி விழுந்திட்டாயோ - சந்திரமதி புலம்பல்! யாரடி கள்ளி! இங்கே பிணமது சுடவே வந்தாய், கேளடி மாதே சேதி, கொடுத்திடு சுடலைக்காசு! வெட்டியானாகிப் பேசுகிறான் வேந்தன். சுடலையில்!

இதைவிட, கல்லையும் உருக்க வேறு சோகக் காட்சி வேண்டுமா! கல்லுருவமல்ல, கலை பல தெரிந்தவரே! என்ன செய்தீர் இதைக் கண்டு? இரக்கம், இரக்கம் என்று கூறி என்னை இழிவு படுத்தும் எதுகை மோனை வணிகரே மகன் பிணமானான் - மனைவி மாரடித்தழுகிறாள் - மன்னன் சுடலை காக்கின்றான் - பிணத்தை எட்டி உதைக்கிறான். ஏன் இரக்கம் காட்டவில்லை? தபோதனராயிற்றே! நான் தான் அரக்கன், இரக்கம் எனும் ஒரு பொருள் இல்லை - இவருக்கு என்ன குறை! ஏன் இரக்கம் கொள்ளவில்லை? கம்பர்: (காரணம், விளக்கம் அறியாமல் இரா வணன் பேசுகிறான் என்று நீதிதேவனுக்கு எடுத்துக் காட்டும் போக்கில்) சத்ய சோதனை யன்றோ அச்சம்பவம்! மூவுலகும் அறியுமே, முடி யுடை வேந்தனாம் அரிச்சந்திர பூபதி சத்யத்தை இழக்கச் சம்மதிக்காமல், சுடலை காத்தது! சோதனை சத்ய சோதனை... இராவணன்: ஆமய்யா ஆம்! சத்ய சோதனைதான் ஆனால் இங்கு தான் இரக்கம் ஏன் அந்தச் சமயத்திலே முனிவரை ஆட்கொள்ள வில்லை என்று கேட்கிறேன். விசுவாமித்திரர் : அரிச்சந்திரனை நான் வாட்டி வதைத்தது, அவனிடம் விரோதம் கொண்டல்ல. இராவணன்: விசித்திரம் நிரம்பிய வேதனை! காரணமின்றிக் கஷ்டத்துக்குள்ளாக்கினீர், காவ லனை இதயத்தில் இரக்கத்தை நுழைய விடாமல் வேலை செய்தீர்! விசுவாமித்திரர்: அரிச்சந்திரன் பொய் பேசாத வன் என்பதை .

இராவணன்: தெரியுமய்யா - இரு தவசிகளுக் குள் சம்வாதம் - அதன் பயனாக நீர் ஓர் சபதம் செய்தீர், அரிச்சந்திரனைப் பொய் பேச வைப் பதாக.. விசுவாமித்திரர்: ஆமாம் அந்தச் சபதத்தின் காரணமாகத் தான். இராவணன்: சர்வ ஞானஸ்தராகிய உமக்கு இரக்கம் எழ வேண்டிய அவசியம் கூடத் தெரிய வில்லை .. விசுவாமித்திரர்: அதனால் அரிச்சந்திரனுடைய பெருமைதானே அவனிக்கு விளங்கிற்று.

இராவணன்: அதுமட்டுமல்ல! உம்முடைய சிறுமைக் குணமும் வெளிப்பட்டது. (விசுவா மித்திரர் கோபம் கொள்கிறார்.) கோபித்துப் பயன்? அவ்வளவு மட்டுமல்ல கம்ப இலக்கணமும் கவைக்கு உதவாது என்பது விளங்கிற்று - இரக்கம் நீர் கொள்ளவில்லை, உம்மை இவர் அரக்கராக்க வில்லை, இலக்கணம் பொய்யாயிற்று! நேர்மை யுடன் இப்போதும் கூறலாம். ஆம்! சில சமயங்களில் தேவரும் மூவரும் தபோதனருங்கூட இரக்கம் காட்ட முடியாத நிலை பெறுவதுண்டு என்று. ஆனால் வேதம் அறிந்தவராயிற்றே! அவ்வளவு எளிதிலே உண்மையை உரைக்க மனம் வருமோ! வெட்கமின்றிச் சொல்கிறீர். நான் அரிச்சந்திரனைக் கொடுமைப்படுத்தியது, அதற்காக இரக்கத்தை மறந்தது அவனுடைய பெருமையை உலகுக்கு அறிவிக்கத்தானே உதவிற்று என்று. நான் ரிஷியல்ல, ஆகவே, நான் ஜானகியின் பெருமை யையும் இராமனின் வீரத்தையும், அனுமனின் பராக்கிரமத்தையும், அண்ணனையும் விட்டோடிய விபீஷணனின் ஆழ்வார் பக்தியையும் உலகுக்குக் காட்டவே இரக்கத்தை மறந்தேன் என்று கூறிப் பசப்பவில்லை. என் பரம்பரைப் பண்புக்கும், பர்ணசாலைப் பண்புக்கும் வித்தியாசம் உண்டு.

தொடரும்..

- விடுதலை நாளேடு, 23.11.18

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக