இரா: தாய் பிடிக்க, தந்தை அறுக்க, சீராளனைக் கறியாக்கும்படி தயாபரன் சோதித்தது, இரக்க மென்ற ஒரு பொருள் இல்லாதவர் அரக்கர் என்ற உமது இலக்கணத்தைப் பொய்யாக்கத்தான்! சிறுத்தொண்டன் உமது சிறுமதிக் கோட்பாட்டைப் பெருநெறியெனக் கொண்டிருந்ததால், சிவனாரை நோக்கி, அய்யனே! பாலகனைக் கொன்று கறி சமைக்கச் சொல்கிறீரே, எப்படி மனம் வரும்? இரக்கம் குறுக்கிடுமே! என்று கூறியிருந்திருப்பார். உமது தொண்டர் புராணமும் வேறு உருவாகி இருக்கும் அல்லவா?
கம்: பேசினால் மிருகத்தின் கதை; இல்லா விட்டால் மகேசன் கதை இவ்வளவுதானா? இவை இரண்டும் வாதத்துக்குத் தக்கவையாகா? ஒன்று பகுத்தறிவு இல்லாத பிராணிக்கதை; மற்றொன்று மனித நீதிக்குக் கட்டுப்பட வேண்டிய அவசிய மில்லாத மகேஸ்வரன் விஷயம். பிரஸ்தாப வழக்குக்கு இரண்டும் பொருந்தா.
நீதி: கம்பர் கூறினது முற்றிலும் உண்மை. காட்டில் புலியும், கைலையில் உலவும் ஈசனும் கோர்ட் விவகாரத்திலே உனக்கு உதவி செய்ய முடியாது.
இரா: வேள்வி செய்யும் முனிவர்கள், இரக்கம் கொள்ளவில்லை என்பதைக் கூறினேனே. . .
நீதி: ஆமாம். . . கம்பரே! குறித்துக் கொள்ளும்... சரி, இராவணரே! வேறு உண்டோ !
இரா: ஏராளமாக! ஆமாம்... தாங்கள் எதற்குக் கட்டுப் பட்டவர்?
நீதி: நீதிக்கு! இரா: மண்டோதரி; இது சமயம் இங்கு நின்று கதறினால்.
நீதி: நீதி நெறியினின்று நான் அப்போதும் தவற முடியாது.
இரா: அவளுடைய கண்ணீரைக் கண்டும், ... நீதி: கண்ணீருக்காகக் கடமையினின்றும் தவற மாட்டேன். இரா: அப்படியானால் கடமை பெரிதா? இரக்கம் பெரிதா? நீதி: சிக்கல் நிறைந்த கேள்வி...
இரா: சிக்கல் நிறைந்ததுதான்! ஆனால் பல ருக்கும் இந்தப் பிரச்சினை வந்தே தீரும். கடமையின் படிதானே நீர் நடந்தாக வேண்டும்?
நீதி: ஆமாம்!
இரா: கடமையை நிறைவேற்றுகையில் அச்சம், தயை, தாட்சண்யம், எதுவும் குறுக்கிடக் கூடாது. ஆக, அறமன்றத்திலே நீர் வீற்றிருக்கும் போதெல்லாம் அரக்கர் தானே?
நீதி: கம்பரே! குறித்துக் கொள்ளும்! கம்: உயர்ந்த இலட்சியத்துக்காக உழைக் கிறீர்கள்; இரக்கம் என்பதை இலட்சியப்படுத்தாதது குற்றமல்ல. . .
இரா: ஆம்! ஆனால் எது உயர்ந்த லட்சியம் - எது குறைந்தது என்பது அவரவர்களின் சொந்த அபிப்பிராயம். அந்த அபிப்பிராயத்தை உரு வாக்குவது அவரவர்களின் தொழில், வாழ்க்கை முறை, ஜீவியத்திலே அவர்களுக்கென்று ஏற்பட்டு விடும் குறிக்கோள் இவற்றைப் பொறுத்தது.
நீதி: சரி! வேறு உண்டோ ?
இரா: ஏன் இல்லை ! தபோதனரும், நீதிபதியும் மட்டுந்தானா? என்னைப் போன்றவர்கள் இன் னும் ஏராளம்! சாட்சிகளை அழையுங்கள். இனி. ...
[சாட்சிகள் பட்டியைப் பார்க்கிறார் நீதிதேவன்... சூர்ப்பனகை வருகிறாள்.)
இரா: தங்கையே! உன் கதையைக் கூறு. ... நீதி: எழுதிக் கொடுத்து விடட்டுமா?
இரா: ஆமாம்! ஆயிரமாயிரம் வீரர்களுக்கு அதிகாரியாக வீரமொழி பேசி வந்த என் தங்கை இப்போது, நாலு பேர் நடுவே நின்று பேச முடியாதபடி தான் ஆக்கப்பட்டுவிட்டாள். ..
(சூர்ப்பனகை ஓர் ஒலையைக் கொடுக்கிறாள்.... கோர்ட் டிலே ஒருவர் அதை வாசிக்கிறார்...)
இராம இலட்சுமணரைக் காட்டிலே கண்டேன். மூத்தவரிடம் மோகம் கொண்டேன். எவ்வளவோ எடுத்துக் கூறினேன். காதல் கனலாகி என்னைத் தகித்தது. மன்றாடினேன். . . ! இரா: கொஞ்சம் நிறுத்து! நீதிதேவா! ஒரு பெண்; அரச குடும்பத்தவள், அதிலும் வணங்காது வாழ்ந்து வந்த என் தங்கை வலியச் சென்று, தன் காதலை வாய் விட்டுக் கூறினாள். இராமன் மறுத்தான். ... ஏன்? கம்: இது தெரியாதா? ஸ்ரீராமச்சந்திரர் ஏக பத்தினி விரதர்.
இரா: ஏகபத்தினி விரதம் என்ற இலட்சியத்திலே அவருக்குப் பற்றுதல். ...,
கம்: ஆமாம்! இரா: அந்த இலட்சியத்தை அவர் பெரிதென மதித்தார். கம்:பெரிதென மட்டுமல்ல, உயிரென மதித்தார்.
இரா: தாம் உயிரென மதித்த இலட்சியத்தின்படி நடந்து கொள்ள வேண்டுமென்று, ஒரு மங்கையின் கண்ணீரைக் கண்டால் இயற்கையாக வரும் இரக்கத்தை இரவிகுல சோமன் தள்ளிவிட்டார்.
கம்: இரக்கம் காட்டுவதா இந்தத் தூர்த்தையிடம்? இரா: காதலைத் தெரிவிப்பவர் தூர்த்தையா?
கம்: இஷ்டமில்லை என்று கூறினபிறகு, வலிய சென்று மேலே விழுவது, உயர்குல மங்கையின் பண்போ ?
இரா: கம்பரே! என் தங்கை சூர்ப்பனகை கண்ட ஆடவர் மீது காமுற்றுக் கருத்தழிந்தவளா? இராமனைக் காணுமுன்பு, அன்று நடந்து கொண் டது போல என் தங்கை வேறு எந்தச் சமயத் திலேனும் நடந்து கொண்டாளா?
கம்: இல்லை! ஒரு முறை செய்தால் மட்டும் குற்றம் குறைந்து விடுமா, என்ன?
இரா : அதற்கல்ல நான் கேட்பது? ஒருநாளும் இன்றி, அன்று இராமனைக் கண்டதும் காதல் கொண்டாள். அவளுடைய குணமே கெட்டது என்றா அதற்குப் பொருள்? அன்று மட்டும் அவ்விதமான எண்ணம் ஏற்பட்டது ஏன்?
கம்: என் இராமனுடைய சவுந்தர்யத்தைக் கண்டு! இரா: குற்றம் அவளுடையதா? கம்: ஏன் இல்லை? சீதையிருக்க, இவள் எப்படி....
இரா: மன்னர்கள் பல மனைவியரை மணம் செய்வது முறைதானே?
கம்: ஆமாம்! ஆனால் இராமன் ஏக பத்தினி விரதனாயிற்றே!
இரா: அவள் அறியமாட்டாளே! ஆகவேதான், தன் ஆசையைத் தெரிவித்தாள். அன்று வரை அவள் எந்த ஆடவரிடமும் வலிய சென்று காதலை வெளியிடும் வழுக்கி விழுந்தவளல்ல! அன்று ஒர் வடிவழகனைக் கண்டாள்; மன்றாடி நின்றாள். இரக்கம் இருந்தால் ஏற்றுக் கொண்டிருக்கலாமே! விரதத்துக்குப் பங்கம் வரக்கூடாதென் பதிலே விசேஷ அக்கறை கொண்டு, அவளை நிராகரிப்பதா னாலும்; இப்படி அலங்கோலப்படுத் தாது இருந்திருக் கலாமே! அவளுடைய நாசியைத் துண்டித்தபோது இராம - இலட்சுமணர்கள் இரக்கத்தை எத்தனை யோசனை தூரத்திலே விரட்டினார்கள்? அவர்கள் அரக்கரல்லவா?
கம்: காமப்பித்தம் பிடித்து அலைந்தவளைத் தண்டிக்காமல் விடுவரோ ?
இரா: கம்பரே! நான் இருக்கிறேன், தண்டனை தர! என் தங்கையின் துர்நடத்தையை எனக்குத் தெரிவித்திருக்கலாமே! ஏதாவது தந்திரம் பேசி, அவளை அனுப்பி விடுவது; மறுபடி அவள் வருவதற்குள் எனக்குச் செய்தி அனுப்பினால், நான் இருக்கிறேன், அவளுக்குப் புத்தி புகட்ட! இரக்கமும் இல்லை ; யூகமும் இல்லை: இதோ, இங்கே நிற்கிறாள், நாசியற்ற நங்கை! இரக்கத்தை மறந்த அரக்கரால் அலங்கோலப்படுத்தப்பட்டவள்! தங்காய் போ! தயையே உருவெடுத்தவர்களின் தீர்ப்பு; நான் இரக்கமென்ற ஒரு பொருள் இலா அரக்கன் என்பது! ஒரு நாள் சிக்கின சூர்ப்பனகை. எந்த நாளும் எவர் முன்பும் வர முடியாத நிலையைப் பெற்றாள். என் கைதியாகப்பலநாள் இருந்த சீதை, சவுந்தர்யவதியாய், சகல சவுபாக்கியங்களையும் அயோத்தியிலே பிறகு அனுபவித்தாள். ஆனால் நான் அரக்கன். ...
(சூர்ப்பனகை போய் விடுகிறாள். நீதிதேவன் மறுபடியும் சாட்சிப் பட்டியைப் பார்க்கிறார்.
இரா: நீதிதேவா! சாட்சிப் பட்டியிலே தாடகை, சுபாகு, மாரீசன், கரன் முதலிய வதைபட்ட என் மக்களின் பெயர் இருக்கும். அவர்களெல்லாம் துஷ்டர்கள். ஆகவே தண்டித்தார் என்று கம்பர், பல்லவி பாடுவார். அகவே, அவர்களை விட்டு விடும். கூப்பிடும் கைகேயி அம்மையை!
(கைகேயி வருகிறாள்)
இரா: கேகயன் மகளே! மந்தரையின் சொல் லைக் கேட்ட பிறகு, இராமனைப் பட்டத்துக்கு வரவிடாமல் தடுக்க நீ திட்டம் போட்டாயல்லவா?
கை: ஆமாம்!
இரா: சக்கரவர்த்தியின் மூத்த குமாரன் என்ற முறையிலே இராமனுக்கு அயோத்தியிலே ஆனந் தமாக வாழ்வு இருந்ததல்லவா?
கை: ஆமாம்!
இரா: அதிலும் கண்ணோடு கண் கலந்த காதல் வாழ்க்கை நடத்தி வந்தக் காலம். ..
கை: ஆமாம். ..
இரா: அப்படிப்பட்ட ஆனந்த வாழ்விலே இருந்த இராமனைக் காடு போகச் சொன்னபோது, அடவியிலே உள்ள கஷ்டம், ஆபத்து இவை களுக்கு இராமன் உள்ளாகி, மிகவும் கஷ்டப்படு வானே என்று உமக்குத் தோன்றவில்லையா?
- விடுதலை நாளேடு, 16.11.18
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக